மாட்ரிட்,
நேற்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கு கனடாவின் கடலில் சென்று கொண்டிருந்த ஸ்பானிஷ் மீனவர்களின் விசைப்படகு மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, நேற்று அதிகாலை காலை 5:24 மணியளவில் கலீசியா துறைமுகத்தைச் சேர்ந்த 50 மீட்டர் நீளம் கொண்ட மீன்பிடிக் கப்பலில் இருந்து மாட்ரிட்டிற்கு பேரிடர் அழைப்பு வந்துள்ளது. 5 மணி நேரம் கழித்து அந்த கடல்பகுதியில் அருகில் இருந்த மற்றொரு ஸ்பானிஷ் விசைப்படகு, இரண்டு உயிர்காக்கும் படகுகளைக் கண்டுபிடித்தது.
அதில் ஒரு படகில் இருந்த 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றொரு படகில் இருந்தவர்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். உயிர் பிழைத்த 3 மாலுமிகளும் கடுமையான குளிர்ந்த வெப்பநிலையால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கனேடிய கடலோரக் காவல் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று நியூபவுண்ட்லேண்ட் என்ற இடத்திலிருந்து கிழக்கே 250 கடல் மைல் தொலைவில் கப்பல் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் 24 பேர் சென்றுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 7 பேர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அங்கு கடுமையான வானிலை, தேடுதல் பணிக்கு சவாலாக இருப்பதாகவும் இருந்தாலும், கனேடிய மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர், ராணுவ விமானம், கடலோர காவல்படை கப்பல் மூலம் தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.