பாஜகவும், ஆம் ஆத்மியும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்று பிரியங்கா காந்தி பேசுகிறார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ,
காங்கிரஸ்
கட்சியின் நகல்தான்
ஆம் ஆத்மி
என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
பஞ்சாப் தேர்தல் களத்தில் தேசியக் கட்சிகளான பாஜகவும் சரி, காங்கிரஸும் சரி, இரு கட்சிகளும் கண்டு நடுங்கும் கட்சியாக மாறி நிற்கிறது ஆம் ஆத்மி. இக்கட்சிதான் சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களை வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் பி ரசாரம் செய்தபோது பிரியங்கா காந்தி கூறுகையில், ஆம் ஆத்மியும், பாஜகவும் ஒன்றுதான். நரேந்திர மோடியும், கெஜ்ரிவாலும் ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து வந்தவர்கள். இருவருமே தத்தமது மாநிலங்களில் தோல்வி அடைந்த ஆட்சி முறையைக் கொடுத்தவர்கள் என்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் பிரியங்கா பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு அமைந்துள்ளது. பதான்கோட்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி அசல் என்றால், அதன் நகல்தான் ஆம் ஆத்மி. அயோத்தி கோவிலாக இருக்கட்டும் அல்லது ராணுவ நடவடிக்கையாக இருக்கட்டும், இவர்களுக்கு அது பிடிப்பதில்லை. இதுபோன்றவர்களை மக்கள் பொறுத்துக் கொள்ளக் கூடாது. நிராகரிக்க வேண்டும்.
பஞ்சாபில் காங்கிரஸ் ஊழல் செய்தது என்றால், ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஊழல் செய்கிறது. பஞ்சாப் முடிவு செய்து விட்டது.. இந்த முறை மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அது தீர்மானித்து விட்டது. பஞ்சாபை வளர்ச்சியான மாநிலமாக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஆனால் எதிர்க்கட்சிகளோ, ஆட்சி அதிகாரத்தை மட்டுமே குறி வைத்து களத்தில் நிற்கின்றன.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாகிஸ்தானில் உள்ள கர்தார்புர் குருத்வாராவை புறக்கணித்து விட்டனர். ஆனால்
பாஜக
ஆட்சியில்தான் கர்தார்பூர் சாஹிப் சாலை போடப்பட்டது. கர்தார்பூர் குருத்வாராவை இந்தியாவுடன் தக்க வைக்க காங்கிரஸ் ஏதாவது முயற்சி செய்ததா, இல்லை. 1965ம் ஆண்டு மட்டும் அவர்கள் அக்கறையுடன் முயற்சி செய்திருந்தால், இந்த நேரம் குருநானக் பிறந்த பூமி இந்தியாவில் இருந்திருக்கும்.
நமது படையினர் 2016ம் ஆண்டு பதான்கோட் தாக்குதலின்போது வீர மரணம் அடைந்ததை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி மட்டுமே நாட்டுடன் இணைந்து இருக்கவில்லை. அனைவருமே பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக இருந்தபோது காங்கிரஸ் மட்டும் எதிர்த்து நின்றது. அரசை அவர்கள் கேள்வி கேட்டனர். பஞ்சாப் மக்களை கேள்வி கேட்டனர், நமது ராணுவத்தை சந்தேகித்தனர். நமது படையினரின் தியாகத்தை இவர்கள் குறைத்து மதிப்பிட்டனர். புலவாமா தாக்குதலின் நினைவு தினத்தையும் கூட அவர்கள் இழிவுபடுத்தினர் என்றார் நரேந்திர மோடி.