சண்டிகர்: காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் ஒரே பக்கம் நின்று மல்யுத்தம் ஆடுகின்றன, அவர்களின் சண்டை வெறும் கண்துடைப்பு, காங்கிரஸ் ஒரிஜினல், ஆம் ஆத்மி ஜெராக்ஸ் என பிரதமர் மோடி கிண்டல் செய்தார்.
பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்தநிலையில் பஞ்சாபின் பதான்கோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
பாகிஸ்தானில் இருந்து கர்தார்பூரை மீட்க காங்கிரஸுக்கு மூன்று வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அந்த வாய்ப்புகளை அந்த கட்சியால் பயன்படுத்த முடியவில்லை. பஞ்சாபின் அமைதி மிக முக்கியம். ஆனால் ராணுவத்தின் மீது கேள்வி எழுப்பும் கட்சியான காங்கிரஸின் கையில் பஞ்சாப் பாதுகாப்பாக இல்லை.
பாஜக எங்கு ஆட்சிக்கு வந்தாலும், வாரிசு அரசியலும், ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி முறையும் ஒழியும். பாகிஸ்தான் பதன்கோட்டைத் தாக்கியபோது, ராணுவத்தின் திறமை குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களை அவமதித்தனர். இத்துடன் அவர்கள் நிறுத்தவில்லை, இப்போதும் அதையே செய்கின்றனர். புல்வாமா தாக்குதல் தொடர்பாக ராணுவத்தின் நடவடிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பினார். அதிகாரத்தை அவர்களிடம் ஒப்படைக்க முடியாது. காங்கிரஸ் கைகளில் பஞ்சாப் பாதுகாப்பாக இல்லை.
பஞ்சாபி மக்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம். எதிர்க்கட்சிகள் பஞ்சாபை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கின்றனர். கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸில் இருந்தபோது, அவர்களை தவறான பாதையில் செல்லவிடாமல் தடுத்தார், இப்போது அவரும் அங்கு இல்லை.
காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் ஒரே பக்கம் நின்று மல்யுத்தம் ஆடுகின்றன. அவர்களின் சண்டை வெறும் கண்துடைப்பு. காங்கிரஸ் ஒரிஜினல், ஆம் ஆத்மி ஜெராக்ஸ்.
பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பஞ்சாபின் எல்லைப் பகுதியை மத்திய அரசு சீரமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, சாந்த் ரவிதாஸின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தி தனது உரையைத் தொடங்கிய மோடி, டெல்லியில் இருந்து ஜம்மு செல்லும் போது ரயிலில் பதான்கோட் வந்து ரயில் நிலையத்தில் தங்கியிருந்த பழைய நாட்களை நினைவு கூர்ந்தார்.