தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் சமீப காலமாக சந்தேகத்திற்கிடமான வகையில் பேசத் தொடங்கியுள்ளார். இதை பலரும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளனர். அவரு தற்போதைய நோக்கம் தேசிய அரசியில் புகுவது, மாநிலத்தை தனது மகனிடம் ஒப்படைப்பது என்பதுதான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
இத்தனை நாட்களாக மத்திய அரசையோ அல்லது பிரதமர் மோடியையோ திட்டாமல் அமைதியாக தான் உண்டு, தனது தெலங்கானா உண்டு என்று இருந்து வந்தவர் கே.சி.ஆர். ஆனால் சமீப காலமாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். விரட்டியடிப்பேன் என்றெல்லாம் ஆவேசம் காட்டுகிறார். வடிவேலு படத்தில் வருவது போல ” வா வா சண்டைக்கு வா.. சண்டைக்கு வா” என்று வம்படியாக பிரதமரை வம்பிழுத்துக் கொண்டிருக்கிறார்.
இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் உள்குத்து இல்லாமல் அரசியல் செய்ய முடியுமா.. முடியாது இல்லையா.. அந்த வகையில், கே.சி.ஆரின் இந்தக் கொந்தளிப்புக்குப் பின்னால் வேறு ஒரு மேட்டர் இருக்கிறது. அதாவது தேசிய அரசியலில் ஐக்கியமாக முடிவு செய்து விட்டார் கே.சி.ஆர். அதற்கு ஸ்டிராங்கான கூட்டணியோ அல்லது தளமோ தேவை என்பதால் அவர் பிரதமர் மோடியை டச் செய்துள்ளார்.
மோடியை விமர்சிக்க ஆரம்பித்தால் தானாகவே தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் தன்னைத் தேடி வரும்.. அதைப் பிடித்துக் கொண்டு அப்படியே டெல்லி போய் விடலாம் என்பதே கே.சி.ஆரின் திட்டமாக கருதப்படுகிறது. இதனால்தான் தொடர்ந்து அவர் பிரதமரை விமர்சித்து வருகிறார். சவால் விடுகிறார். சண்டைக்கும் இழுக்கிறார் என்கிறார்கள்.
ஆனால் கே.சி.ஆரின் வருகையை
மமதா பானர்ஜி
கட்டாயம் விரும்ப மாட்டார்.. காரணம், கே.சி.ஆர். விஸ்வரூபம் எடுத்தால் அது மமதாவுக்குத்தான் பாதிப்பை உண்டாக்கும். பிரதமர் நரேந்திர மோடியை விட மமதாவே இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. காரணம், கே.சி.ஆர் மனதில் என்னவெல்லாம் இருக்கிறதோ அதே ஆசைகளும், அபிலாஷைகளும்தான் மமதாவிடமும் இருக்கிறது.
தேசிய அளவில் தனது தலைமையில் மாற்றுக் கூட்டணி அமைக்க முயன்று வருகிறார் மமதா பானர்ஜி. காங்கிரஸை இந்த சீனிலிருந்தே அகற்றுவதே அவரது ஒரே நோக்கமாக உள்ளது. கே.சி.ஆரும் கூட என்டிஆர், சந்திரபாபு நாயுடு போல, தேசிய அளவில் தான் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர். எனவே மமதாவுக்கும், கே.சி.ஆருக்கும் எந்த அளவுக்கு ஒத்துப் போகும் என்று தெரியவில்லை.
மோடி எதிர்ப்பில் கே.சி.ஆரை விட மமதா மிகவும் வலுவாக செயல்பட்டு வருகிறார். மோடியை எதிர்த்து மேற்கு வங்காளத் தேர்தலையும் ஜஸ்ட் லைக் தட் வென்று தனது மோடி எதிர்ப்பின் தீவிரத்தை நிரூபித்தவர் மமதா பானர்ஜி. ஆனால் வெறும் விமர்சனப் பேச்சுக்களை மட்டுமே கே.சி.ஆர். வெளிப்படுத்தி வருகிறார். மோடியை எந்த இடத்திலும் அவர் வீழ்த்தியதே இல்லை. எனவே இந்த விஷயத்தில் கே.சி.ஆரை விட மமதாவே வலுவானவர் என்று சொல்லலாம்.
கே.சி.ஆரும் சரி, மமதாவும் சரி தேசிய அளவிலான கூட்டணி மட்டுமல்லாமல் பிரதமர் கனவுடனும் இருப்பவர்கள். இரு மாநிலங்களுமே நாட்டின் முன்னணி மாநிலங்களின் வரிசையில் இருப்பவை. இப்படி பல்வேறு சாதகங்கள் இருவருக்கும் இருப்பதால் இரு தலைவர்களுமே தங்களுக்கு தேசிய அளவில் சரியான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். தங்கள் பக்கம் பிற கட்சிகள் திரண்டு வருவார்கள் என்றும் நம்புகின்றனர்.
ஆனால் இவர்களின் மோதலாலும், எழுச்சியாலும் பாஜகவுக்கோ அல்லது மோடிக்கோ எந்தப் பாதிப்பும் கிடையாது என்று அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். நிச்சயம் கே.சி.ஆரும், மமதாவும் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. இருவரும் ஆளுக்கொரு கூட்டணியை அமைத்தால் அது மோடிக்கே லாபமாக அமையும் என்பது அவர்களது கருத்தாகும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.