திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கூலி தொழிலாளி ஒருவர் கோடீஸ்வரர் போல வலம் வரும் வீடியோ வைரலாக பரவி வந்தது.
அந்த வீடியோவில் ஒருவர் லுங்கியை மடக்கி கட்டியபடி, கையில் கவர் ஒன்றை பிடித்த படி சாதாரணமாக நடந்து வருவதும், பின்னர் அதே நபர் கோட், சூட் அணிந்து கண்ணில் கருப்பு கண்ணாடியும், கையில் ஐபேடுடனும் ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
இந்த வீடியோ வெளியான ஒருசில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோவுக்கு லைக் கொடுத்ததோடு, அதனை மேலும் பலருக்கு பகிர்ந்தனர்.
இதையடுத்து வீடியோவில் தோன்றிய நபர் யார், எதற்காக இந்த படம் வெளியானது என பலரும் விசாரித்த நிலையில், அந்த வீடியோவில் தோன்றியது கோழிக்கோட்டை அடுத்த கொடுவல்லியை சேர்ந்த மம்மிக்கா (வயது 60) என்ற கூலி தொழிலாளி என தெரியவந்தது.
இவரது நண்பரான ஷெரிக் வயாலில் அந்த பகுதியில் புகைப்பட கலைஞராக உள்ளார். அவர் கோட், சூட் விற்பனை நிலையமும் நடத்தி வருகிறார். ஊரில் நடக்கும் தனது தொழிலை விரிவுப்படுத்த அவர் மம்மிக்காவை சினிமா ஸ்டார் போல படம் எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்து உள்ளார். உள்ளூர் மக்கள் மட்டுமே இதனை பார்ப்பார்கள் என கருதிய அவருக்கு, மம்மிக்காவின் படம் உலகம் முழுவதும் பரவி பலத்த வரவேற்பை பெறும் என கருதவில்லை.
இதுபற்றி அவர் கூறும் போது, மம்மிக்கா பார்க்க மலையாள நடிகர் விநாயகன் போல இருப்பார். அவரை மனதில் வைத்து மம்மிக்காவின் ஹேர் ஸ்டைல், உடை அலங்காரத்தை மாற்றி படம் எடுத்தேன். அதற்கு கிடைத்த வரவேற்பு, என்னை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. எனவே இதனை தொடர்ந்து செய்வேன், என்றார்.
கேரளாவில் ஒரே நாளில் பிரபலமான மம்மிக்காவிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:- எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தேன், போட்டோகிராபர் ஷெரிக் வயாலில் என் வீடு அருகே வசித்து வருகிறார். அவர்தான் என்னிடம் இதுபோல போட்டோ எடுக்க வேண்டும் எனக்கூறினார்.
கையில் ஐபேட் கொடுத்து கருப்பு கண்ணாடி, கோட், சூட் அணிய வைத்தார். நான் கையில் வைத்திருந்தது ஐ பேட் என்பதே பிறர் சொல்லிதான் தெரிந்து கொண்டேன். அதனை பயன்படுத்த தெரியாது. மேலும் கோட், சூட் அணிந்து சொந்த ஊரில் இப்படி வலம் வருவேன் என கனவிலும் நினைக்கவில்லை.
இப்போது இந்த வேலையை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. என்னை மாடல் என்று பலரும் அழைக்கிறார்கள். அதுவும் மகிழ்ச்சியை தருகிறது. வாய்ப்பு கிடைக்கும் வரை இந்த தொழிலையும் செய்வேன்.