தெஹ்ரான்: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஈரான் – இராக் இடையே நடந்த கால்பாந்தாட்ட போட்டியைக் காண பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பாந்தட்ட போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிப் போட்டி தெஹ்ரானில் நடைபெற்றது. இதில் ஈரான் – இராக் ஆகிய நாடுகள் பங்கெடுத்தன. இப்போட்டி ஆசாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சுமார் 10,000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில் 1000 டிக்கெட்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. இப்போட்டியை பெண்கள் மைதானத்தில் மகிழ்ச்சியுடன் பார்த்து களித்தனர்.
மைதானத்தில் போட்டியைக் கண்ட 26 வயதான இளம்பெண் பேசும்போது, “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். முதன்முதலாக நான் நேரடியாக கால்பந்தாட்டத்தைப் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார். மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஈரான் கொடியுடன் மகிழ்ச்சியாக பங்கெடுத்தனர்.
சஹர் கோடயாரியால் ஏற்பட்ட மாற்றம்:
ஈரான் நாட்டில் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து, விளையாட்டை ரசிப்பதற்குப் பெண்களுக்கு 1981-ம் ஆண்டு முதல் தடை இருந்து வந்தது. அந்நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புகள் இதை எதிர்த்து வந்தன. இந்த நிலையில், ஈரானின் மைதானங்களில் விளையாட்டுகளைக் காண பெண்களுக்கு அனுமதி கோரி பல போராட்டங்களை நடத்தியவர் சஹர் கோடயாரி (28).
சஹர் கோடயாரி, 2019-ஆம் ஆண்டு கடந்த மார்ச் மாதம் ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. இது தொடர்பாக நடந்த வழக்கை 6 மாதங்களாக சஹர் எதிர்கொண்டார். 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் சஹர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று தெரியவந்தது. இதனால் சஹர் நீதிமன்றத்தில் தீக்குளித்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.
சாஹரின் மரணம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளுக்கு முடிவில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஈரான் பெண்கள் மீண்டும் கால்பந்தாட்ட மைதானத்துக்குள் பார்வையாளராக அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் பெண்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.