சூர்யாவின் சிங்கம் படத்தில் பார்த்த சிவப்பு நிறத்தில் ஆன மணல் மேடு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது தூத்துக்குடியில் உள்ள தேரிக்காடுதான். இந்த தேரிக்காட்டின் மகத்துவம் என்ன தெரியுமா? தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரிக்காடு தமிழகத்தின் ஒரே செம்மண் மணல் மேடு பாலைவனம் என அழைக்கப்படுகிறது.
பூமி வெவ்வேறு நிலப்பரப்புகளால் ஆனது. நிலப்பரப்பு மனித வாழ்க்கையை வடிவமைக்கிறது என்றால் அது மிகையல்ல. விருதுநகர் மாவட்டம், கோவில்பட்டி போன்ற பகுதிகளில் கரிசல் நிலம் என்றால் அதற்கு மாறாக தூத்துக்குடியில் தேரிக்காடு செம்மண் நிறைந்த மணல் மேடு பாலைவனமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு மிகவும் சிவப்பு நிறத்தில் செம்மண் மணல் மேடு தூத்துக்குடி மாவட்டத்தில் தேரிக்காட்டில் காணப்படுகிறது. பார்பதற்கு அழகான இந்த செம்மன் தேரிக்காடு பகுதி பற்றி தமிழ்நாடு புவியியல் துறை புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு புவியியல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தேரிக்காட்டின் செம்மண் மணல் மேடு பகுதியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், “தூத்துக்குடி மாவட்டத்தில் தேரிக்காடு என்ற இடம் உள்ளது. தமிழகத்தின் ஒரே மணல் திட்டு பாலைவனம் இதுதான். சிவப்பு மணல் மேடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் அருகருகே இரு பகுதிகள் உள்ளன. இங்கு நிறைய அய்யனார் கோயில்கள் உள்ளன. இது அய்யனாரின் பூமி என்று அழைக்கப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தேரிக்காடு தாமிரபரணி மற்றும் கரும்நெய்யாறு ஆற்று படுகை இடையே அமைந்துள்ளது. மன்னார் வளைகுடாவை நோக்கி தெற்கு தென் கிழக்காக சரிந்த நிலையில் இந்த தேரிக்காடு காணப்படுகிறது. இதன் பரப்பளவு சுமார் 11 ஆயிரம் ஏக்கர் என கூறப்படுகிறது. இப்பகுதியில் இந்த சிவப்பு மணல் எப்படி பரவிக் கிடக்கிறது என்பது இயற்கையின் அதிசயம்தான். தேரிக்காடு சிவப்பு மணல் பகுதி, 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என சொல்லப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்லாமல், நெல்லை மாவட்டம் குட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் செம்மண் மேடுகள் அதிகம் உள்ளன. ஆனால், அவை தேரிக்காடு கிடையாது. இறுக்கமாக இருக்கக்கூடிய செம்மன் நிலப்பகுதி ஆகும். செம்மண் நிலப்பரப்பில் முந்திரி மரங்கள் நன்றாக வளரும். ஆனால், தேரிக்காட்டில் ஒரு சுனையில் கோடைக்காலத்தில்கூட சுவையான தண்ணீர் கிடைப்பதாக கூறுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், தேரிக்காட்டிலுள்ள கற்குவேல் அய்யனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தேரிக்காட்டுக்கு அருகில் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் உள்ளது. நிறைய அய்யனார் கோயில்கள் உள்ளதால் இது அய்யனார் பூமி என்றும் அழைக்கப்படுகிறது.
பார்ப்பதற்கு அழகான தூத்துக்குடி மாவட்ட தேரிக்காட்டைத்தான் இயக்குனர் ஹரி தனது சிங்கம் படத்தில் காட்டியிருப்பார். இந்த நிலப்பரப்பை திரையில் பார்த்தவர்கள் பலரும் இது எங்கே இருக்கிறது பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டனர். அந்த அளவுக்கு திரையில் அழுத்தமாக பதிவாகி இருந்தது சிவப்பு மணல் மேடு தேரிக்காடு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“