புதுடெல்லி: சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய்க்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டெல்லி, குருகிராம், பெங்களூருவில் உள்ள அலுவலகங்களில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நேற்று முதல் சோதனை நடந்து வருகிறது. நிதி ஆவணங்கள், வரவு செலவு புத்தகங்கள், ஹூவாயின் இந்திய வணிகம், பணப்பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் குறித்து சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது நடக்கும் சோதனை குறித்து ஹூவாய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
‘‘வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை குறித்தும், அலுவலகத்தில் நடக்கும் விசாரணை குறித்தும் நாங்கள் அறிந்துள்ளோம். இந்தியாவில் எங்களது செயல்பாடுகள் அனைத்து சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் உறுதியாக இணங்குவதாக நம்புகிறோம்.
அனைத்து சட்டங்கள், விதிமுறைகளை கடைபிடித்து இந்தியாவில் செயல்படுவோம். கூடுதல் தகவல்களுக்கு, தொடர்புடைய அரசு துறைகளுடன் ஆலோசனை நடத்துவதுடன், சரியான சட்டம் மற்றும் விதிமுறைகளை மதித்து முழு ஒத்துழைப்பு வழங்குவோம்’’ எனத் தெரிவித்துள்ளது.