இயக்குநர் தங்கர் பச்சானின் ’டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தின் டைட்டில் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ’களவாடிய பொழுதுகள்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் தங்கர் பச்சான் தன் மகன் விஜித் பச்சானை ஹீரோவாக அறிமுகமாக்கி ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். பிஎஸ்என் எண்டெர்டைன்மெண்ட்ஸ் தயாரிக்க தரண்குமார் இசையமைத்துள்ளார். பிரபு – தயாளன் ஒளிப்பதிவு செய்ய தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டைட்டில் பாடல் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
’டக்கு முக்கு டிக்கு தாளம்’ டைட்டில் பாடலை தங்கர் பச்சானே எழுதியுள்ளார். ‘டக்கேய்… முக்கேய்… டிக்கு… டிக்கு.. டக்கு முக்கு டிக்கு தாளம்’ என ஒலிக்கும் தேவாவின் அதிரவைக்கும் குரலும் தரண்குமாரின் இசையும் குதூகலமூட்டுகிறது. பாடலுக்கு ஏற்ப, நடிகர் விஜித் பச்சானின் கேஷுவலான நடனமும் கவனம் ஈர்க்கின்றன. பாடல் படமக்காப்பட்ட காட்சிகளையும் பாடல் பதிவு காட்சிகளையும் ஒன்றாக இணைத்து தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.
விஜித் பச்சானுடன் மிலனா நாகராஜ், அஷ்வினி சந்திரசேகர், முனீஸ் காந்த, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் பலர் நடித்திருக்கிறார்கள். ‘அழகி’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனாலும் சமூக வலைதளங்களில் படத்தினைக் கொண்டாடினார்கள். இந்த நிலையில், ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இப்படம் குறித்து ஏற்கனவே தங்கர் பச்சான் பேசும்போது “இதுவரை எடுத்த படங்கள்ல தங்கர்பச்சான் படத்தில என்னென்ன இருக்குமோ அது எதுவுமே இதுல இருக்காது. இது என்னோட படம் மாதிரி இருக்காது. சொல்லக்கூச்சமா தான் இருக்கு 13 நாள் வெறும் சண்டைக்காட்சிய மட்டும் எடுத்துருக்கேன். போலீஸே என் படங்கள்ல வந்ததில்ல. ஆனா இந்தப்படத்துல போலீஸ், கொலை,போதைப்பொருள் கடத்தல், துரத்தல், டப்பாங்குத்து எல்லாம் இருக்கு. ஆனால், அதி ஒரு தனித்துவம் இருக்கும். எடுக்கப்படும் முறைனு ஒன்ணு இருக்கு. அதில், தங்கர்பாச்சான் முத்திரை இருக்கும்.எடுத்திருக்கேன். நம்ப மட்டும் ஏன் நடந்ததையே எடுக்கனும்னு ஆரம்பிச்சதுதான் இந்த படம்.
ஒரே ஒரு நல்லவர் இருந்தாரு. இப்ப அவரும் இப்படி மாறிட்டாரே? அதுக்காகவே “டக்கு முக்கு டிக்கு தாளம்”னு பேர் வச்சேன். எனக்கென்ன வேற தலைப்பா வைக்க தெரியாது. இனி நம்பள வேற யாரும் கேள்வியே கேட்கக் கூடாதுன்னு தான் இந்த தலைப்பையே வச்சேன். இது வேற மாதிரி படம்ங்கறத மக்கள் கிட்ட பதிவு பண்றேன். மக்களை ஏமாத்திடக் கூடாதுன்னு இத முன்கூட்டியே தெரியப்படுத்திக்கறேன். இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப பொழுது போக்கு சித்திரம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.