கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்த நிலையில், நாட்டின் இளம் மேயராகப் பொறுப்பேற்றார். 21 வயதில் ஆர்யா ராஜேந்திரன் மேயராகப் பொறுப்பேற்று ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில், அவருக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் பாலுசேரி தொகுதி எம்.எல்.ஏ சச்சின் தேவ் என்பவரைத்தான் ஆர்யா கரம்பிடிக்க உள்ளார்.
ஆர்யா ராஜேந்திரன் சிறுமியாக இருக்கும்போதே சி.பி.எம் அமைப்பின் பால சங்கத்தில் இணைந்தார். பின்னர் பாலசங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த ஆர்யா ராஜேந்திரன், மாணவர் சங்கமான எஸ்.எஃப்.ஐ மாநில கமிட்டி உறுப்பினராக பொறுப்பு வகித்தார். அதன்பிறகுதான் சி.பி.எம் சார்பில் திருவனந்தபுரம் மேயராக ஆனார்.
பால சங்கத்தில் செயல்பட்ட காலத்தில் இருந்தே சச்சின் தேவும், ஆர்யா ராஜேந்திரனும் நட்பாக இருந்துள்ளனர். அதன் பிறகு எஸ்.எஃப்.ஐ அமைப்பிலும் இருவரது நட்பும் தொடர்ந்துள்ளது. அந்த நட்புதான் இருவரையும் திருமணம் வரை கொண்டுசேர்த்துள்ளது.
கோழிக்கோடு, நெல்லிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் தேவ். கோழிக்கோடு அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற சச்சின் தேவ், பின்னர் கோழிக்கோடு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். எஸ்.எஃப்.ஐ மாநில செயலாளராக இருந்த சச்சின் தேவுக்கு கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சி.பி.எம் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆகிவிட்டார்.
ஆர்யா ராஜேந்திரன் மற்றும் சச்சின் தேவ் ஆகியோரது திருமணத் தேதி அறிவிக்கப்படவில்லை. அதே நேரம் திருமணம் ஒரு மாதத்துக்குப் பிறகு நடைபெற உள்ளதாக எம்.எல்.ஏ சச்சின் தேவின் தந்தை நந்தகுமார் அறிவித்துள்ளார்.