சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு சீக்கிய தலைப்பாகை விவாதப் பொருளாக மாறியுள்ளது. தலைப்பாகை கட்டி விட்டால் நீங்கள் சீக்கியர்கள் ஆக முடியுமா? என பிரதமர் மோடி, அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டவர்களை பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சி அமைக்க முயல்கிறது. பாஜக ஆதரவில் பஞ்சாபில் ஆட்சி செய்த சிரோமணி அகாலி தளம், 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள் பிரச்சினையில் பிரிந்தது.
தற்போது சிரோமணி அகாலி தளம் தனித்து போட்டியிடுகிறது. ஏற்கெனவே, அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பாஜக-வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியால் பஞ்சாபின் 117 தொகுதிகளில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.
தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அங்கு பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்கள் அனைவரும் பஞ்சாபில் முகாமிட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது அண்மையில் பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் சீக்கியர்களின் தலைப்பாகையை அணிந்து மேடையேறி பேசினர். ஆனால் இதனை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் ரூப்நகர் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு வாக்குச் சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது:
‘‘சிலர் பஞ்சாப்புக்கு வந்தால் மேடையில் தலைப்பாகை அணிந்து கொள்கின்றனர். மேடையில் தலைப்பாகை அணிவதால் அவர்கள் சர்தார் ஆகவிட முடியாது. இந்த தலைப்பாகையின் கடின உழைப்பையும், தைரியத்தையும் பற்றி நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். பஞ்சாப் மாநிலம் பஞ்சாப் மக்களுக்குச் சொந்தமானது என அவர்களிடம் கூறுங்கள், அவர்கள் ஓடி விடுவார்கள்.’’
இவ்வாறு அவர் பேசினார்.
இதுபோலவே காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரியும் பாஜக மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் சீக்கிய தலைப்பாகை அணிவது குறித்து கண்டித்துள்ளார். ”தலைப்பாகை என்பது பஞ்சாப் மாநிலத்தின் கவுரவம், இதனை வைத்து யார் அரசியல் செய்தாலும் கண்டிக்கதக்கது, அவ்வாறு அரசியல் செய்யக்கூடாது” எனக் கூறினார்.