புதுடெல்லி: தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் வந்தன. அப்போது, நீதிபதி நாகேஸ்வர ராவ், ‘இந்த வழக்கை அரசியல் சாசன உயர் அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. அதனால், மனுதாரர்கள் வாதங்களை முன் வைக்கலாம்,’ என தெரித்தார்.இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, குமணன் ஆகியோர், ‘தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு, 9வது அட்டவணையின்படி பாதுகாக்கப்பட்டு உள்ளது. அதோடு, இந்த 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ஒப்பிட முடியாது. தமிழகத்தில் அதிகமாக உள்ள பெரும்பான்மை சமூகமாக வன்னியர்கள் உள்ளனர். இதில், பல்வேறு உட்பிரிவுகளும் உள்ளன. எனவே, இந்த உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு மட்டுமே என்று குறுகிய வட்டத்தில் அடக்கி விட முடியாது. மாநில அரசுக்குள்ள அதிகாரத்தின்படி இந்த உள்ஒதுக்கீட்டை வழங்க முடியும்,’ என வாதிட்டனர்.பாமக தரப்பு வாதத்தில், ‘கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கழிவறைகளை கழுவுபவர்களாகவும், துப்புரவு தொழிலாளர்களாகவும் வன்னியர்கள் உள்ளனர். பல இடங்களில் சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்கின்றனர். இது குறித்து அம்பா சங்கர் அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சமூக மக்கள் எம்பிசி இடஒதுக்கீட்டுக்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போது, ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர். எனவே, வறுமை நிலையில் இருப்பவர்களை தூக்கிவிட இந்த உள்ஒதுக்கீடு தேவை,’ என தெரிவித்தது. எதிர் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘9வது அட்டவணையில் சட்டப் பாதுகாப்பு பெறப்பட்டு இருந்தால் மட்டுமே, இந்த இடஒதுக்கீடு பற்றி கேள்வி எழாது,’ என தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.