லக்னோ: பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றால் அவர்களுடைய வீடுகள் ஜே.சி.பி. கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்படும் என அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் கௌஷா மகர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.-வான ராஜாசிங் பேசிய சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், உத்திரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காத வாக்காளர்களுக்கு அவர் மிரட்டல் விடுத்துள்ளார். உத்திரப்பிரதேச முதலமைச்சரான யோகி ஆதித்யநாத் ஆயிரக்கணக்கான ஜே.சி.பி. வாகனங்களை கொள்முதல் செய்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். பாஜகவுக்கு வாக்களிக்காதோர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். பாஜகவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எந்த அளவிற்கு பாஜகவினர் தரம் தாழ்ந்து செல்வார்கள் என்பதற்கு இதுவே உதாரணம் என்றும் மற்றொரு நகைசுவையாளராக ராஜாசிங் உருவாகியுள்ளதாகவும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிட்டி செயல் தலைவரும், அம்மாநில அமைச்சருமான கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.