நியூயார்க்: பிரபல பிடிஎஸ் இசைக் குழு குறித்து இன ரீதியாக அமெரிக்க தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவை சேர்ந்த இசைக் குழுவான பிடிஎஸ், உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று. இக்குழுவில் உள்ள அனைவருக்கும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரும், காமெடி நடிகருமான ஜிம்மி கிம்மல் தனது நிகழ்ச்சியில் பேசும்போது, 90-களிலிருந்து அறிமுகமான பல்வேறு இசைக் குழுகளை பற்றி கூறிவிட்டு இறுதியாக, “ஒமைக்ரானை போன்று வேற்றுருவாக்கம் கொண்ட இசைக் குழு (பிடிஎஸ்) ஒன்று தற்போது பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் அழித்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிடிஎஸ் இசைக் குழுவைதான் ஜிம்மி கிம்மல் மறைமுகமாக கூறுகிறார் என்று அக்குழுவின் ரசிகர்கள் ‘இனவெறி உடையவர் ஜிம்மி கிம்மல்’ என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஆசியாவை சேர்ந்தவர்களை ஜிம்மி வெறுக்கிறார் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்கலில் ஜிம்மி கிம்மலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
பிடிஎஸ் குறித்து ஜிம்மி கிம்மல் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் பிடிஎஸ் இசைக் குழு குறித்து அவர் விமர்சித்திருக்கிறார்.
யார் இந்த பிடிஎஸ் குழுவினர்?
பிடிஎஸ் என்பது ஜின், ஆர்.எம், ஜுங்கூக், ஜே-ஹோப், சுகா, வி மற்றும் ஜிமின் போன்ற ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஆண்கள் இசைக்குழு ஆகும்.
பிடிஎஸ் குழு 2010-இல் உருவாக்கப்பட்டு 2013-இல் பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் கீழ் அறிமுகமானது. இக்குழுவின் பாடல்கள் பெரும்பாலும் சமூக நிகழ்வுகளை மையமாகக் கொண்டவை. இதன் காரணமாக இக்குழுவின் பாடல்கள் இளைய தலைமுறையிடத்தில் மிகவும் பிரபலம். பிடிஎஸ் இசைக் குழு இதுவரை 6 அமெரிக்க இசை விருதுகள், 5 பில்போர்டு மியூசிக் விருதுகளையும் வென்றுள்ளது.