விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்று `பூவே உனக்காக’. இந்தப் படத்துக்கு முன் அவர் ‘ரசிகன்’, ‘தேவா’, ‘ராஜாவின் பார்வையிலேயே’ சந்திரலேகா’ என ‘சி’ சென்டர் படங்களைக் கொடுத்து வந்தார். அவரை ஃபேமிலி ஆடியன்ஸிடம் கொண்டு சேர்த்ததில் இந்தப் படத்துக்கு முக்கிய பங்கிருக்கிறமு. அதைப் போல இயக்குநர் விக்ரமன் கரியரிலும் திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இதற்கு முன்பு அவர் இயக்கிய ‘புதிய மன்னர்கள்’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ இரண்டுமே பெரிய வெற்றிபெற்றவில்லை. ஆனால், இந்தப் படம் 270 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. கடந்த 1996 பிப்ரவரி 15ம் தேதி மதுரையிலும் அதன் மறுநாள் (16ம் தேதி ) உலகமெங்கும் வெளியானது. 26 வருடங்கள் காணும் ‘பூவே உனக்காக’ குறித்து இயக்குநர் விக்ரமனிடம் பேசினேன்.
” பூவே உனக்காக’ ஒரு வருஷம் ஓடியிருக்கணும். பிப்ரவரியில் வெளியாகி தொடர்ந்து ஹவுஸ்ஃபுல்லா ஓடிட்டிருந்தது. இடையே தீபாவளி வந்ததால.. வேற படங்கள் ரிலீஸ் பண்ண வேண்டிய சூழலாலதான் மாத்தினாங்க. 270 நாட்கள் ஓடி விழா, ஷீல்டுனு அமர்க்களமா போச்சு. இதோட ஸ்கிரிப்ட் எழுதும்போதே, இந்தக் கதைக்கு விஜய், நம்பியார், நாகேஷ், மலேசியா வாசுதேவன்னு பலரையும் மனசில வச்சுத்தான் எழுதினேன்.
என்னோட முந்தையப் படங்கள் சரியா ஓடலை. எனக்காக ஆர்.பி.சௌத்ரி சார் தயாரிச்ச படம் தான் இது. அவர்கிட்ட விஜய் நடிச்சா பொருத்தமா இருக்கும்னு சொன்னதும், உடனே சௌத்ரி சார், ‘நீங்க ஏஸ்.ஏ.சி. சார்கிட்ட நீங்க கதை சொல்லுவீங்களா?’னு கேட்டார். யார்கிட்ட வேணும்னாலும் சொல்வேன். எனக்கு தயக்கமில்லனு சொன்னேன். எஸ்.ஏ.சி. சார்கிட்ட கதை சொல்லும் போது விஜய்யையும் கூப்பிட்டு உட்கார வச்சு கதையை சொன்னேன். ரெண்டு பேருக்குமே கதை பிடிச்சிடுச்சு. ஆனா, விஜய் கால்ஷீட் உடனடியா கிடைக்கல. ஸோ, மூணு மாசம் காத்திருந்து, ஷூட்டிங் கிளம்பினோம்.
இந்தப் படத்துக்கு இப்ப நீங்க பார்ககுற க்ளைமாக்ஸ் தயாரிப்பாளருக்கு பிடிக்கல. ஏன்னா, ‘படம் முழுவதும் ஹேப்பியா போகுது. ஸோ, முடிவும் சந்தோஷமா அமையட்டும்’னு சௌத்ரி சார் விரும்பினார். ஆனா, ‘காதலை சுமந்துட்டு இருக்கறதே சுகமானது’ க்ளைமாக்ஸ் தான் இந்த கதைக்கு வலு கொடுக்கும்னு நம்பினேன். ரிலீஸுக்கு முன்னாடி இந்தப் படத்தை பார்த்த நெருங்கிய நண்பர்கள், மீடியேட்டர்கள், விநியோகஸ்தர்கள் எல்லாருமே இப்ப உள்ள க்ளைமாக்ஸை ரொம்பவே விரும்பி ரசிச்ச பிறகு தான் அவருக்கு நம்பிக்கை வந்துச்சு.
இந்தப் படத்துக்கு முன்னாடி எஸ்.ஏ.ராஜ்குமாருடனான நட்பில் சின்ன விரிசல் இருந்தது. அதனால சிற்பி, ரஹ்மான்னு போயிட்டேன். இதற்கிடையே அவரும் சொந்தப் படம் தயாரிச்சு நொடிஞ்சிருந்தார். மறுபடியும் பட வாய்ப்பில்லாமல் இருந்தார். என்னைத் தேடி வந்து வாய்ப்புக் கேட்டதும் உடனே இந்தப் படத்துக்கு சௌத்ரி சார்கிட்ட சொல்லி இசையமைக்க வச்சேன். ஏன்னா அவரோட திறமை மீது எனக்கு எப்பவும் நம்பிக்கை உண்டு.
இதுல நம்பியார் சார், நாகேஷ் சார், மலேசியா வாசுதேவன்னு எல்லாரையும் இயக்கினது சந்தோஷமானது. ஆனந்தபாபுவை வச்சு இதுக்கு முன்னாடி ரெண்டு படங்கள் இயக்கியிருந்ததால, நாகேஷ் சார் எனக்கு நன்கு அறிமுகமாகி இருந்தார். முரளி என்னோட குடும்ப நண்பர் மாதிரி. அவர்கிட்ட ‘மச்சினிச்சி வந்த நேரம்’ பாடலுக்கு ஆட கேட்டேன். உடனே வந்து ஆடியதுடன்.. எனக்காக சம்பளமும் வாங்கிக்கல.
இதுல மிகப்பெரிய ஜாம்பவான்களை இயக்கினது போல சிவாஜி சாரை வச்சும் படம் இயக்கணும்னு விரும்பினேன். ஆனா அந்த ஆசை நிறைவேறல. அப்ப எம்.ஜி.ஆர். முதல்வரா இருந்தார். அதோட விழாவுல சிவாஜி சாருக்கு எம்.ஜி.ஆர் சார் கையால விருது கொடுக்க வைக்கணும்னு விரும்பினேன். ஆனா, என் கனவு நனவாகாம போனதுல வருத்தமுமிருக்கு..” என்கிறார் விக்ரமன்.