பொது ஊழியர் என்பவர் நேர்மையாகவும் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றும் பதிவுத் துறையில் ஏற்கனவே ஊழல்கள் அதிகம் உள்ளதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டையில் உதவி சார்பதிவாளராக பணியாற்றும் சந்திரசேகரன் என்பவர் வரும் ஜூன் மாதம் ஓய்வுபெறவுள்ள நிலையில், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நியமனத்தை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.
பொது ஊழியரான ஒருவர் தனக்கான பதவியையோ, பணி இடத்தையோ அவரது விருப்பத்தின்படி கேட்க முடியாது என்று கூறிய நீதிபதி, பதிவுத்துறை விதிகளின்படி ஓய்வு பெற உள்ள 6 மாதத்திற்குள் அவர் முக்கியத்துவம் வாய்ந்த பணியில் இருக்க முடியாது என்றார்.
மனுதாரரின் கோரிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறிய நீதிபதி, மனுதாரரின் பணிப்பதிவேடு தொடர்பான ஆவணங்களையும் அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் முறையாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அப்படி இல்லாவிட்டால் பணி விதிப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.