கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவில்லமாக மாற்ற நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது எனக்கூறி அவசரச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு பிறப்பித்தது.
அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு முடிவு செய்தது.
எனவே, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி, வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய 36 கோடி ரூபாய் நிலுவைத் தொகை மற்றும் ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோருக்கு செலுத்த வேண்டிய பணம் முழுவதையும் வீட்டிற்கான இழப்பீட்டுத் தொகையாக 67.90 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்தும்படி உத்தரவிட்டிருந்தார்.
எனவே, ஒரு சதுர அடி 12,000 ரூபாய் எனக் கணக்கீடு செய்து வாரிசுகளுக்கு கொடுக்கும் வகையில், ரூ.68 கோடியை வங்கியில் டெபாசிட் செய்து போயஸ் தோட்ட இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில், இப்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க அரசு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை விலைக்கு வாங்கச் செலுத்தப்பட்ட ரூ.68 கோடி டெபாசிட் தொகையைத் திரும்பப் பெறுவதாகவும், கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிடுவதாகவும் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.