புதுடில்லி:’நாடு முழுதும் உள்ள, ‘மெட்ரோ’ நகரங்களில் மூன்றாவது அலை பெரும் அளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால், வரவிருக்கும் மாதங்கள் நிம்மதி அளிக்க கூடியதாக இருக்கும்’ என, மரபணு வரிசை பரிசோதனை பிரிவின் மூத்த ஆய்வாளர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், உருமாறிய, ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா தொற்று தென் ஆப்ரிக்காவில் துவங்கி, உலகம் முழுதும் பரவியது.கடந்த ஆண்டு டிச., இறுதியில் நம் நாட்டில் மூன்றாவது அலை துவங்கியது.
‘ஒமைக்ரான்’ தொற்று அதிவேகமாக பரவக்கூடியது என்பதால், தொற்று உறுதி செய்யப் படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்தது.
‘பூஸ்டர் டோஸ்’
இதையடுத்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் அமலுக்கு வந்தன. தொற்று பரவல் குறைய துவங்கி உள்ளதை அடுத்து, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.தற்போதைய தொற்று பரவல் நிலை குறித்து, சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு நிறுவனத்தின் கீழ் செயல்படும், மரபணு வரிசை மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் பிரிவின் இயக்குனர் டாக்டர் அனுராக் அகர்வால் கூறிய தாவது:
ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் ஒமைக்ரான் தொற்று பரவல் நாட்டில் 90 சதவீதத்துக்கு மேல் இருந்தது.ஆங்காங்கே சிலருக்கு, ‘டெல்டா’ வகை தொற்றும் ஏற்பட்டது. ஆனால் தற்போது நாடு முழுதும் உள்ள, ‘மெட்ரோ’ நகரங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. வரும் மாதங்கள் நிம்மதி அளிக்க கூடியதாக இருக்கும்.எனவே, அனைவருக்கும், ‘பூஸ்டர் டோஸ்’ போட வேண்டிய அவசியம் இப்போது இல்லை.வைரஸ் உருமாற்றம் அடையாத வரை தொற்று பரவல் சரிந்து கொண்டே வரும். இவ்வாறு அவர் கூறினார்.
அறிக்கை
தமிழகத்தின் வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையின் தொற்று நோயியல் துறை பேராசிரியர் டாக்டர் ககன்தீப் கங் பேசுகையில், ”நாட்டில் கொரோனா தொற்று பரவல் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது,” என்றார். உலக அளவிலும் கூட கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த வாரம், உலகம் முழுதும் 1.60 கோடி புதிய தொற்று பாதிப்பும், 75 ஆயிரம் உயிரிழப்பும் பதிவாகி உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தொற்று பரவல் 37 சதவீதம் குறைந்துள்ளது. உலக அளவில் தொற்று பரவல் 19 சதவீதம் குறைந்து உள்ளது.’ஒமைக்ரான்’ பரவல் அதிகரித்ததை அடுத்து, ‘ஆல்பா, பீட்டா, டெல்டா’ வகை தொற்று குறைந்துவிட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டுப்பாடுகளை தளர்த்தமத்திய அரசு அறிவுறுத்தல்
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த மாதம் 21ல் இருந்து தொற்று பரவல் குறைய துவங்கி உள்ளது. தினசரி தொற்று விகிதம் 3.63 ஆக குறைந்துள்ளது. இதன் காரண மாக, கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ள மாநிலங்கள் அதை மறுஆய்வு செய்து, நிலைமையை பொறுத்து தளர்வுகளை அறிவிக்கலாம்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.