மும்பை,
மராட்டிய சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி அடுத்த மாதம்(மார்ச்) 3-ந் தேதி பட்ஜெட் கூட்டம் தொடங்குகிறது. இதில் மார்ச் 11-ந் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
மார்ச் 25-ந் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பட்ஜெட் கூட்டத் தொடர் மும்பையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நாக்பூரில் நடைபெறுவது வழக்கம். ஆனால், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் சமீபத்தில் நடந்த குளிர்கால கூட்டத் தொடர் நாக்பூருக்கு பதில் மும்பையில் நடைபெற்றது.
இதனை ஈடு செய்யும் வகையில் பட்ஜெட் கூட்டத் தொடரை நாக்பூரில் நடத்த முடிவு செய்து இருந்ததாகவும், ஆனால் தற்போது அது மும்பையில் நடைபெறும் என்று அறிவித்து இருப்பது விதர்பா பகுதி மக்களை புறக்கணிக்கும் செயல் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.