பியோங்யாங் : வட கொரிய முன்னாள் அதிபர் பிறந்தநாளான இன்று, அவரது பெயரிலான பூக்கள் மலர ஏற்பாடு செய்யாத தோட்ட தொழிலாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங்- உன். அண்டை நாடுகளுடன் விரோத போக்கை கடைபிடிக்கும் இவரது தலைமையிலான அரசின் சட்டங்களும் மக்களை அச்சுறுத்துவதாக இருக்கும். கிம் ஜாங் உன்னின் தந்தையும், முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல்லின் 10ம் ஆண்டு நினைவு நாள், கடந்த ஆண்டு டிச., மாதம் கடைபிடிக்கப்பட்டது. அவர் இறந்து 11 நாட்களுக்கு பின் தான் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன.
இதனால், அந்த 11 நாட்களும் வடகொரிய மக்கள் சிரிக்க, மது அருந்த, மளிகை பொருட்கள் வாங்க, கேளிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அடுத்ததாக, முன்னாள் அதிபரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது மறைவிற்கு பின், அந்நாட்டில் ‘பெகோனியாஸ்’ வகை மலர்களுக்கு அவரின் நினைவாக ‘கிம்ஜாங்கிலியா’ என பெயரிடப்பட்டது.
முன்னாள் அதிபரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவ்வகை மலர்களை அரசு தோட்டத்தில் இன்று அதிகம் மலரச்செய்ய வேண்டும் என, அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் அவர் கூறியதுபோல் மலர்கள் இன்று மலர வாய்ப்பில்லை என்பது உறுதியானது. இதையடுத்து, மேற்பார்வையாளர் உள்ளிட்ட தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
Advertisement