பெய்ஜிங்: பல்வேறு நாட்டினர் பங்கேற்றுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் உலக மக்களுடன் ஹைடெக் செயலிகள், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் மூலம் மொழித் தடையை தகர்த்து அவர்கள் மொழியில் பேசுகின்றனர்.
பிப்ரவரி 4 தொடங்கி 20ம் தேதி வரை பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளுக்காக இங்கு முதல் முறையாக நூறு சதவீத செயற்கை பனியை உருவாக்கியுள்ளனர். இந்தியாவிலிருந்து பனிச்சறுக்கு வீரர் ஆரிப் கான் மட்டும் ஒற்றை வீரராக குளிர்கால ஒலிம்பிற்கு தகுதிப் பெற்றார். பிப்.,13ல் நடந்த போட்டியில் பதக்கத்தை தவறவிட்டவர், நாளை (பிப்., 16) நடைபெறும் போட்டியில் பங்கேற்கிறார்.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு தலைமை வகித்த தளபதியை சீனா ஒலிம்பிக் தீபபேந்துபவராக நியமித்ததை கண்டித்து இந்திய பிரதிநிதிகள் தொடக்கம் மற்றும் நிறைவு விழாவினை புறக்கணித்துள்ளனர். பதக்க பட்டியலில் நார்வே, ஜெர்மனி, அமெரிக்கா ஆகியவை முதல் மூன்றிடங்களை பிடித்துள்ளன. போட்டி நடத்தும் சீனா ஆறாமிடத்தில் உள்ளது. பெய்ஜிங்கில் ஆங்கிலப் பயன்பாடு குறைவு. மாண்டரின் மொழி பேசுபவர்களே ஏராளம். ஆனால் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் பங்கேற்பாளர், பார்வையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆங்கிலம், ஜெர்மனி, ரஷ்யன், நார்வேஜியன், பிரஞ்சு பேசுபவர்கள்.
இவர்களுடனான மொழித் தடையை உடைத்து தங்கள் வணிகத்தை நடத்த அங்குள்ள நிறுவனங்கள் நவீன அலைபேசி செயலிகள் மற்றும் கையடக்க ஜார்விசென் மொழிபெயர்ப்பு கருவியை பயன்படுத்துகிறார்கள். இக்கருவி செயற்கை நுண்ணறிவு கொண்டது. மாண்டரினில் சீனர்கள் பேசுவதை எதிரிலிருப்பவர்களின் மொழிக்கு மொழிப்பெயர்த்து வாசிக்கிறது. அதே போல் எதிரிலிருப்பவர் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பேசினால் மாண்டரினில் அறிவிக்கிறது. இதன் மூலம் அங்குள்ள வணிக நிறுவனங்கள் வியாபாரம் செய்து அசத்துகின்றன.
Advertisement