போபால்: ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் நுழைய மாணவிகளுக்கு தடைவிதிக்கப்பட்ட சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே ம.பி.யில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்கு கடந்த வாரம் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து உள்ளே வந்தனர். இதைக் கண்டித்து விஸ்வஇந்து பரிஷத்தின் (விஎச்பி) துர்காவாஹினி பிரிவைச் சேர்ந்தவர்கள் கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து கல்லூரியின் முதல்வர் டி.ஆர். ராகுல் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அவர் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் ஹிஜாப் உள்ளிட்ட எந்தவித மத அடையாளச் சின்னங்களையும் அணிந்து வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி அணிந்து வருபவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
இதுகுறித்து விஎச்பி அமைப்பின் துர்கா வாஹினி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராணி சர்மா கூறும்போது, “நாங்கள் நேற்று கல்லூரிக்கு வந்தபோது ஹிஜாப், புர்கா அணிந்த மாணவிகள் கல்லூரிக்குள் இருந்ததைப் பார்த்தோம். இதைத் தொடர்ந்தே ஆர்ப்பாட்டம் நடத்தினோம்” என்றார்.
இதுகுறித்து ம.பி.யின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறும்போது, “ஹிஜாப் அணிவது தொடர்பாக மத்திய பிரதேசத்தில் எந்தவிதக் குழப்பமும் இல்லை. இதுதொடர்பாக யாரும் எந்தவிதக் குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மாவட்டஆட்சியருக்கு உத்தரவிட் டுள்ளேன்” என்றார்.