நியூயார்க்: மும்பை, பதான்கோட், புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.நா. தீவிரவாத எதிர்ப்புக் கமிட்டி மாநாட்டில், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரின் ஆலோசகர் ராஜேஷ் பரிஹர் பேசியதாவது: 2008 மும்பை தாக்குதல் (26/11), 2016 பதான்கோட் தாக்குதல், 2019புல்வாமா தாக்குதல் போன்ற கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களை இந்த உலகம் கண்டது. இந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பது அனைவருக்குமே தெரியும்.இந்த தாக்குதலில் பாதிக்கப்பட் டவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.
இந்தத் தாக்குதல்களில் தொடர்புடைய குற்றவாளிகள், சதிகாரர்கள், நிதியுதவி செய்தவர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் அரசின் ஆதரவையும், விருந்தோம்பலையும் அவர்கள் பெற்று வருகின்றனர்.
தீவிரவாதத்தின் மையமாக விளங்கும் அந்த நாடு, ஐ.நா.வால் அடையாளம் காணப்பட்ட 150 பயங்கரவாத அமைப்புகளையும் தனிநபர்களையும் ஊக்குவித்து வளர்க்கிறது. மேலும், தீவிரவாதிகளை தியாகிகள் என அந்நாட்டின் தலைவர்கள் அடிக்கடி பேசி வருகின்றனர்.
இதுபோன்ற தீவிரவாதிகளை சட்டத்துக்கு முன்பாக நிறுத்தி, நீதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா முழுமையாக கடமைப்பட் டுள்ளது. தீவிரவாதத்தின் மையமாகவிளங்கும் அந்த நாடு, தீவிரவாத அமைப்புகள் மீது கால தாமதமின்றி, திறமையான, நம்பகத்தன்மை வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், சர்வதேச சமூகம் குரல் எழுப்ப இதுவே சரியான நேரமாகும்.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, தீவிரவாத எதிர்ப்புக் கமிட்டி தலைவர் என்ற முறையில்இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் டி.எஸ். திருமூர்த்தி இந்த மாநாட்டைத் தொடக்கிவைத்து பேசும்போது, “ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்துக்கு வருவது பிராந்தியத்துக்கு வெளியே, குறிப்பாக ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் சிக்கலான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் அல்-காய்தா தீவிரவாத அமைப்பினருக் கும், வேறு சில தீவிரவாத அமைப்புகளுக்கும் பாதுகாப்பான இடமாக அமையும் அச்சுறுத்தல் உள்ளது.
எல்லை தாண்டிய ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவது உலகம் முழுவதும் கவலைக்குரிய பிரச்சினையாக உள்ளது.
பொறுப்பான மற்றும் மனித உரிமைகளுக்கு இணங்க, தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பங்களின் சக்தியைப் பயன்படுத்த உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்றார்.