இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டியை இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 20 ஓவர் போட்டி இன்று தொடங்கியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் (டேபியு) அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மையர்ஸ் 4 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதேசமயத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன், 43 பந்துகளில், 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 61 ரன்கள் சேர்ந்தபோது, ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இந்திய அணியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ரவி பிஷ்னோய் அசத்தலாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போலார்டு இந்த முறை தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் 24 ரன்களை வரை சேர்த்தார். அதில் ஒரு சிக்சரும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து, 157 ரன்களை சேர்த்தது.
இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா – இஷன் கிஷன் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் ரோகித் சர்மா 19 பந்துகளில், 4 பவுண்டரி, 3 சிக்சருடன், 40 ரன்கள் சேர்த்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
நிதானமாக ஆடிய இஷன் கிஷன் 35 ரன்களும் ,விராட் கோலி 17 ரன்னுக்கும், ரிஷப் பந்த் 8 ரன்னுக்கும் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் (34 ரன்) – வெங்கடேஷ் அய்யர் ஜோடி (24 ரன்), இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உண்டான ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
இறுதியில் இந்திய அணி 18.5 ஓவர்களில், 4 விக்கெட் இழப்பிற்கு, 162 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது. வெற்றிக்கான ரன்னை சிக்ஸர் அடித்து சிறப்பாக முடித்துவைத்தார் வெங்கடேஷ் அய்யர்.