புதுடெல்லி:
ரஷியா- உக்ரைன் இடையிலான மோதல் தீவிரமடைந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்துள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எனவே, உக்ரைனில் இருந்து இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. விமானங்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.
ஆனால், உக்ரைனில் இருந்து உடனடியாக இந்தியர்களையோ அல்லது தூதரக அதிகாரிகளையோ மீட்கும் திட்டம் இல்லை எனவும், தற்போது உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
‘பதற்றங்களை உடனடியாகத் தணிக்கவும், தூதரக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கவும் இந்தியா ஆதரவளிக்கிறது. ஏர் பபிள் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்பட்டன. மேலும் உக்ரைனில் இருந்து திரும்பி வர விரும்பும் இந்தியர்களுக்கு வசதியாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன’ என்றும் அவர் கூறினார்.
தனியார் விமானங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் சார்ட்டர் விமானங்களை இயக்க இந்திய விமான நிறுவனங்களிடம் கூறியிருப்பதாகவும், அல்மாட்டி, ஷார்ஜா, இஸ்தான்புல் மற்றும் துபாய் போன்ற பிற வழித்தடங்கள் வழியாக விமானங்கள் உள்ளன என்றும் கூறினார்.