சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளுடன் ஆம் ஆத்மி முதன்முறையாக போட்டியிடுகிறது. இதனால் வெற்றி பெறும் முனைப்புடன் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் பதேகார்க் நகரில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
போதைப் பொருள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று நான் தொடர்ந்து கூறினேன். பஞ்சாப் பரிசோதனை செய்ய வேண்டிய மாநிலம் அல்ல. போதைப் பொருள் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்துக்கொண்டால் பஞ்சாபின் வளர்ச்சி அர்த்தமற்றதாகி விடும்.
பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ஏன் நீக்கப்பட்டார் என்பதை நான் உங்களுக்கு கூறுகிறேன்.
ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தினேன். ஆனால், மின் நிறுவனங்களுடன் தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் தர முடியாது என்றார். அதனால் முதல் மந்திரி பதவியில் இருந்து அவரை நீக்கினேன் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…வீடுகளில் பாதுகாப்பு இல்லாதவர்களுக்குதான் ஹிஜாப் தேவை: பிரக்யா தாகூர்