மாஸ்கோ: உக்ரைனில் போர்ப்பதற்றம் நிலவு வதால் அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நட வடிக்கை எடுத்து வருகிறது.
1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திரநாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது.
இந்த சூழலில்தான் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்துள்ளது. உக்ரைன் மீதுபடையெடுப்பதற்காகவே ரஷ்யாஎல்லையில் படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்து வருகிறது. அதே போல் இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளும் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளதாக எச்சரித்துள்ளன.
இந்நிலையில், ஜெர்மனி பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறும்போது, “உக்ரைன் மற்றும் பிற முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். ரஷ்ய எல்லைகளுக்கு அருகே ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்த வேண்டும். கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கூட்டுப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை அமெரிக்காவும் நேட்டோ நாடு களும் நிராகரித்துள்ளன.
அதேசமயம், ரஷ்யா முன்பு முன்மொழிந்த பல பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவா திக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஐரோப்பாவில் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான வரம்புகள், போர் பயிற்சிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பிற நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் மேற்குநாடுகள் ரஷ்யாவின் முக்கிய கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். இவ்வாறு புதின் கூறினார்
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
இதனிடையே உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக உக்ரைனின் கீவ் மற்றும் டெல்லியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் நாடு திரும்ப வசதியாக கூடுதல் விமானங்களை இயக்குவது குறித்துபல்வேறு விமான நிறுவனங்களுடன் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.