ஆலியா பட் நடித்துள்ள இந்தி திரைப்படம் `கங்குபாய் கத்தியவாடி’. இதனை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 25 அன்று திரையரங்கில் வெளியாகவுள்ளது. ஆனால் இப்படம் வெளியாவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மும்பை பாலியல் தொழிலாளியான கங்குபாய் என்ற பெண்ணை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில், பாலியல் தொழில் பற்றிய வசனம் ஒன்றை பீடி பிடித்தபடி ஆலியா பட் பேசியுள்ளார்.
இந்நிலையில், ஃபிலிம்ஃபேர் பத்திரிகை தன் ட்விட்டர் பக்கத்தில், ஆலியா பட் போலவே தோற்றம், மற்றும் அவரைப் போலவே பீடி பிடித்தபடி அந்த வசனத்தை ஒரு குழந்தை பேசிய வீடியோ ஒன்றை வெளியிட, அது சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதைப் பார்த்து இன்னும் இரண்டு குழந்தைகளும் அதைப் போலவே மறுஉருவாக்கம் செய்த வீடியோக்களை, ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பலரும், குழந்தைகளை இதுபோன்ற வயதுக்கு ஒவ்வாத வார்த்தைகளைப் பேசவைத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்வதை கண்டித்திருந்தனர்.
இந்த வீடியோவுக்கு, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “இந்தக் குழந்தை பாலியல் தொழிலாளியை மறுஉருவாக்கம் செய்து நடித்து, வாயில் பீடியுடன், ஆபாசமான டயலாக்குகளைப் பேச வேண்டுமா? அவளுடைய உடல் மொழியைப் பாருங்கள், இந்த வயதில் அவளை பாலியல் பொருள்போல் ஆக்குவது சரியா? இதேபோல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பயன்படுத்தப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், கங்கனா ரணாவத் தன் பதிவில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியையும் டேக் செய்திருக்கிறார். கங்கனா ரணாவத் மட்டுமன்றி, எம்.பி பிரியங்கா சதுர்வேதி, திரைப்படத் தயாரிப்பாளர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி என்று பலரும் இந்த வீடியோவுக்கான தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
மேலும், படத்தின் ஒரு காட்சி இனவெறிக்காக விமர்சிக்கப்பட்டது. ஆலியாவின் தோற்றம் மற்றும் ஒளிப்பதிவை ரசிகர்கள் விரும்பினாலும், கங்குபாய் பல் மருத்துவரிடம் அமர்ந்திருக்கும் காட்சிதான் இனவெறியுடன் எடுக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகிறது. அவரை பரிசோதிக்கும் பல் மருத்துவர், மங்கோலாய்டு (Mongoloid) இனத்தை சேர்ந்தவர். அவர் ஆலியாவை வாயை அகலமாகத் திறக்கச் சொல்ல, `என்ன, முழு சீனாவையும் என் வாயில் வைப்பீர்களா?’ என்கிறார் அவர். வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பாகுபாட்டை எதிர்கொள்ளும் சூழலில், இந்தக் காட்சி கண்டிக்கத்தக்கது என்கின்றனர் நெட்டிசன்கள்.
பல பிரபலங்கள், பொதுமக்கள் என எதிர்ப்பு எழுந்ததைத் தொடந்து ஃபிலிம்ஃபேர் பத்திரிகை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய குழந்தை வீடியோவை நீக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
– வைஷ்ணவி பாலு