நடிகர் பார்த்திபனின் ’ஒத்த செருப்பு சைஸ் 7’ இந்தோனேஷியவின் ’பஹாசா’ மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ விமர்சன ரீதியில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்தது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை பார்த்திபனே இயக்கியும் தயாரித்தும் இருந்தார். பார்த்திபனின் இந்த முயற்சிக்கு ’ஸ்பெஷல் ஜூரி’ தேசிய விருது, ரசூல் பூக்குட்டிக்கும் சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
ஏற்கனவே, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் ஈர்த்த நிலையில், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ தற்போது இந்தோனேசியாவின் ‘பஹாசா’ மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. பிடி ஃபால்கன் நவீன் தயாரிக்கும் இப்படம் இந்தோனேசியாவில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக , ’இரவின் நிழல்’ படத்தினை இயக்கி வருகிறார் பார்த்திபன்.