உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்கள் கவலை தெரிவிக்கும் பார்லி., நிலைக்குழு| Dinamalar

‘உக்ரைன் நாட்டில், இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பலர், தங்களது பாதுகாப்பு குறித்து அச்சத்தில் இருப்பது கவலையாக உள்ளது. அவர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்க வேண்டும்’ என, பார்லிமென்ட் நிலைக்குழு தெரிவித்து உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லையில், ரஷ்யா தன் படையினரை குவித்துள்ளது. எந்த நேரத்திலும், போர் மூளலாம் என்பதால், சர்வ தேச அரங்கில் பதற்றம் நிலவுகிறது. அறிவுறுத்தல்இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய துாதரகம், ‘அவசியம் இல்லை என்றால், இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறுவதே சரி.

குறிப்பாக மாணவர்கள், தற்காலிகமாக, உக்ரைனை விட்டு கிளம்பலாம்’ என, அறிவுறுத்தி இருந்தது.இந்நிலையில், நேற்று டில்லியில், சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சக மானியக் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்க, பார்லிமென்ட் நிலைக்குழு கூட்டம், பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யும், குழுத் தலைவருமான டி.ஜி. வெங்கடேஷ், தலைமையில் நடைபெற்றது.

அச்சம்

கூட்டத்தில் நிலைக்குழு உறுப்பினர்கள் பேசிய தாவது:உக்ரைனுக்கு படிக்க சென்ற மாணவர்கள் பலரும், அச்சத்தில் உள்ளனர். அவர்களது உறவினர்களுக்கு வந்து சேரும் தகவல்களை பார்க்கும்போது கவலையாக உள்ளது. எனவே, மாணவர்களை பத்திரமாகவும், விரைவாகவும் மீட்க, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

விமான சேவையைஅதிகரிக்க திட்டம்

உக்ரைனில் உள்ள இந்தியர்களை குறிப்பாக மாணவர்களை விரைவாக அழைத்து வர, கூடுதல் விமான சேவைகளை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள், விமான நிறுவனங்களுடன் பேசி வருகின்றனர்.


ரஷ்ய படைகள் திரும்புகின்றன

உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய ராணுவ வீரர்களில் ஒரு பகுதியினர் திரும்பத் துவங்கி உள்ளதாக அந்நாடு நேற்று முன்தினம் அறிவித்தது.இந்நிலையில், உக்ரைன் அருகே, கிரிமியாவில் குவித்து வைத்திருந்த ஏராளமான போர் ஆயுதங்களுடன் ஒரு ரயில் ரஷ்யாவிற்கு திரும்பும், ‘வீடியோ’ வெளியிடப்பட்டது. அடுத்த கட்ட மாக மேலும் சில படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
– நமது டில்லி நிருபர் –

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.