ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி பல்வேறு மாநிலங்களில் கட்சியை விரிவுப்படுத்தி வருகிறார். ஒரு சில மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கேற்பதன் மூலம் தனது கட்சியின் கால்தடத்தை நாடுதழுவிய அளவில் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையில் ஒவைசி தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார்.
2019 ஆம் ஆண்டில் அவரது கட்சி ஹைதராபாத்திற்கு வெளியே முதல் முறையாக ஒரு மக்களவைத் தொகுதில் வென்றது. அக்கட்சியின் வேட்பாளர் அவுரங்காபாத்தில் சிவசேனா வேட்பாளரை தோற்கடித்தார்.
ஒவைசி கட்சிக்கு தற்போது மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பிஹார் மற்றும் உ.பி. போன்ற மாநிலங்களில் பல மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இதன் பிறகு பிஹார் தேர்தலில் ஒவைசி கட்சி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பிராந்தியத்தில் 5 தொகுதிகளை கைப்பற்றியது.
ஒவைசி தனித்து களமிறங்கி சிறுபான்மையினர் வாக்குகளை பிரித்ததால் காங்கிரஸ்- ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடம் பெற்ற மெகா கூட்டணிக்கு செல்வது தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் பிறகு மேற்குவங்கத் தேர்தலில் அவர் போட்டியிட்டார். ஆனால் அங்கு அவரால் சாதிக்க முடியவில்லை. பாஜகவின் ‘பி டீம்’ என பாஜக எதிர்ப்பு கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.
இந்தநிலையில் உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் தற்போது நடந்து வருகிறது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கிய இந்த தேர்தல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 2 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் போட்டியிடுகிறது.
இதன் மூலம் உ.பி.யிலும் ஒவைசி காலூன்ற முயற்சி செய்து வருகிறார். 2017 இல், அவரது கட்சி மாநிலத்தில் உள்ள 78 இடங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு 31 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவரது கட்சி போட்டியிட்டது.
ஆனால் அந்த கட்சி போட்டியிட்ட 38 இடங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மொத்தம் இரண்டு லட்சம் வாக்குகள் கிடைத்தன. முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் சம்பலில் அதன் வேட்பாளர்களில் ஒருவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நான்கு வேட்பாளர்கள் மட்டுமே தங்கள் டெபாசிட் தொகையை பெற முடிந்தது.
ஏஐஎம்ஐஎம் கட்சியை பொறுத்தவரையில் உ.பி.யிலும் முஸ்லிம் ஆதரவு தளத்தில் இயங்கினாலும் கூட ஒவைசி தன்னை வேறு விதமாக நிலை நிறுத்த முயன்று வருகிறார்.
ஜின்னாவின் இரு தேசக் கோட்பாட்டை எதிர்ப்பதும், ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளான ஜாகியுர் ரஹ்மான் லக்வி மற்றும் ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதன் மூலம் மாற்று சிந்தனையை ஏற்படுத்த முயன்று வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக உ.பி. தேர்தலில் இந்து வேட்பாளர்களையும் அவர் நிறுத்தியுள்ளார்.
இந்த தேர்தலில் ஒவைசியின் அரசியலும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அசாதுதீன் ஒவைசி உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லி திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது வாகனத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து ஒவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் இதனை வேண்டாம் என ஒவைசி மறுத்துள்ளார். இதன் மூலம் பாஜகவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுமட்டுமின்றி ஹரித்வாரிலும் மற்ற இடங்களிலும் சில தலைவர்களின் ஆத்திரமூட்டும் முஸ்லிம் வெறுப்பு பேச்சுகள், ஹிஜாப் சர்ச்சை இவையெல்லாம் உ.பி. தேர்தலில் ஒவைசியை தீவிர நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ளது.
இருப்பினும் உ.பி.யில் கடந்த சில ஆண்டுகளாகவே முஸ்லிம் வாக்குகளை வெகுவாக ஈர்க்கும் கட்சியாக சமாஜ்வாதி கட்சி உள்ளது. நீண்ட காலமாக பாஜகவின் தீவிர இந்துத்துவ கொள்கையை எதிர்த்து முஸ்லிம் ஆதரவு வளையத்தை சமாஜ்வாடி கட்சி ஈர்த்து வருகிறது.
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ஆசம் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் சமாஜ்வாதி கட்சி முஸ்லிம் வாக்குகளை முழுமையாக ஈர்க்குமா அல்லது ஒவைசி வசம் ஒருபகுதி செல்லுமா என்ற கேள்வி எழுகிறது.
முஸ்லிம் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை எடுத்து வைத்து வருவதால் ஒவைசியின் கூட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் கூட்டம் செல்கிறது. ஆனால் அவரது கட்சிக்கு கணிசமான எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு உ.பி. மக்கள் ஒருபோதும் வாக்களித்ததில்லை, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி போன்ற பொதுவான அரசியல் கட்சிகளுக்கே முஸ்லிம் சமூகம் எப்போதும் வாக்களித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்தமுறையும் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக முஸ்லிம்களிடையே தெளிவான ஒருமித்த கருத்து இருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். முக்கியமாக பாஜகவை தோற்கடிக்க கூடிய கட்சியாக சமாஜ்வாதி கட்சியையே அவர்கள் பார்க்கின்றனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கடி கடுமையான தொனியில் பேசி வருவதால் இந்தமுறையும் சமாஜ்வாதி கட்சியை நோக்கியே முஸ்லிம் வாக்குகள் செல்லும் என அரசியல் பார்வையாளர்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர்.