புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அண்ணா பண்ணை விவசாய கல்லூரிக்குள் புகுந்த மலைப்பாம்பை பிடித்த நிலைய அலுவலரின் கையை கடித்தது. ஒரே இரவில் 3 மலைபாம்புகள் பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள அண்ணா பண்ணை விவசாய கல்லூரிக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்பு நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் கல்லூரி வகுப்பறையின் ஓரத்தில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை பிடித்தனர். அப்போது அந்த மலைப்பாம்பு தீயணைப்பு நிலைய அலுவலரான கணேசன் என்பவரின் கட்டை விரலை கடித்துள்ளது. இதில் விரலில் இருந்து ரத்தம் வழிந்து ஓடியது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர் தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
இதேபோல் விராலிமலை அருகே ராஜகிரியில் விவசாய நிலத்தில் ஒரு மலைபாம்பு, அன்னவாசல் தாண்டீஸ்வரம் கோயில் வளாகத்தில் ஒரு மலைபாம்பு என ஒரே இரவில் மூன்று பாம்புகள் பிடிபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிளாஸ்டிக் சாக்குப்பைக்குள் போட்டு கட்டப்பட்ட மலைப்பாம்புகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மூன்று பாம்புகளையும் பெற்றுக்கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM