ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு திரைமறைவில் உதவி செய்பவர்களை கண்டறிதல் மற்றும் பிரிவினைவாத குற்றங்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணும் வகையில் மாநில புலனாய்வு ஏஜென்சி (எஸ்ஐஏ) என்ற தனிப் பிரிவு சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் காஷ்மீரின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பல்வேறு இடங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு பல ஆண்டுகளாக உதவி வந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரும் தனித்தனியாகவே தீவிரவாதி களுக்கு உதவி வந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு ஒருவர் என்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதும் தெரிய வில்லை. ‘ஸ்லீப்பர் செல்’களாக அவர்கள் இருந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 10 பேரில் ஒருவர் தங்கியிருந்த வீட்டில்தான் கடந்த 2020 ஏப்ரல் 4-ம் தேதி பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று எஸ்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.