சிவகங்கை மாவட்டம் கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான, தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.
தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும், பெருமையையும் உலகத்திற்கு உணர்த்தும் வகையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு முதல் கீழடி, அகரம், மணலூர், கொந்தைகை ஆகிய 4 இடங்களில் மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை சார்பாக 7 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன.
இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2,600 வருடங்களுக்கு முற்பட்டது என கூறப்படுகிறது. பச்சை நிற பாசிகள், பானை ஓடுகள், பாசி மணிகள், தாயக்கட்டை, அணிகலன்கள், முதுமக்கள் தாழிகள்சுடு, மண் பானைகள், உறை கிணறுகள், மதில் சுவர்கள், கல்தூண் போன்ற அமைப்புடைய கல், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனிடையே, கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் எட்டாம் கட்டமாக 7 இடங்களில் அகழாய்வுகள் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டதோடு, கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த 11-ம் தேதி காணொலி காட்சி மூலமாக இந்த பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த அகழாய்வு பணிகளில் முதல்முறையாக செவ்வக வடிவிலான தந்தத்தில் ஆன பகடைக்காய் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட ஆய்வுகளில் கனசதுர வடிவில் மட்டுமே பகடைக்காய்கள் கிடைத்து வந்த நிலையில், முதல்முறையாக செவ்வக வடிவிலான தந்தத்தில் ஆன பகடைக்காய் கண்டறியப்பட்டு உள்ளது.
தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ”மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு. இதுகாறும் கீழடியில் கனசதுர (Cubical) வடிவில் மட்டுமே பகடைக்காய்கள் கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த தந்தத்தில் ஆன பகடை 4.5செ.மீ உயரம், 0.9.செ.மீட்டர் உயரம், 0.9.செ.மீட்டர் தடிமன் கொண்டது என தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மேலே எண்களுக்கான குறியீட்டை குறிக்கும் வகையில் வட்ட வடிவ அமைப்பை உள்ளது. கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு வரும் செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாண்புமிகுமுதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு. இதுகாறும் தமிழ் நாடு தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட ஆய்வுகளில் கனசதுர (Cubical)வடிவில் மட்டுமே பகடைக் காய்கள் கிடைத்தது pic.twitter.com/forz56NskS
— Thangam Thenarasu (@TThenarasu) February 17, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM