சண்டிகர்: உ.பி., பிஹார், டெல்லி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை பஞ்சாபிற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பேசிய நிலையில் பிரதமர் மோடி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ரவிதாஸ் மற்றும் குரு கோவிந்த் சிங் இருவரும் பஞ்சாபிற்கு வெளியே பிறந்தவர்கள் என்பதால், பஞ்சாபில் அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கூறுகிறதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ரூப்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அவருடன் பஞ்சாப் மாநில முதல்வர் சன்னியும் கலந்து கொண்டார். அப்போது சன்னி பேசுகையில் ‘‘பிரியங்கா பஞ்சாபின் மருமகள். அவர் நமது பஞ்சாபியர். எனவே பஞ்சாபியர்களே ஒன்றுபடுங்கள். உ.பி. பிஹார், டெல்லியை சேர்ந்த பையாக்கள் பஞ்சாபில் ஆட்சி செய்ய விரும்புகிறார்கள். ஆனால் நாம் அவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது” என்று கூறினார். சன்னியின் பேச்சை பிரியங்கா காந்தி கைதட்டி வரவேற்றார்.
பின்னர் பேசிய பிரியங்கா காந்தி ‘‘சிலர் பஞ்சாப்புக்கு வந்தால் மேடையில் தலைப்பாகை அணிந்து கொள்கின்றனர். மேடையில் தலைப்பாகை அணிவதால் அவர்கள் சர்தார் ஆகவிட முடியாது. இந்த தலைப்பாகையின் கடின உழைப்பையும், தைரியத்தையும் பற்றி நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். பஞ்சாப் மாநிலம் பஞ்சாப் மக்களுக்குச் சொந்தமானது என அவர்களிடம் கூறுங்கள், அவர்கள் ஓடி விடுவார்கள்’’ எனக் கூறினார்.
இந்தநிலையில் பஞ்சாப் முதல்வர் சன்னி மற்றும் பிரியங்கா காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். பஞ்சாப் மாநிலம் அபோகரில் நடந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘காங்கிரஸ் எப்போதும் ஒரு பகுதி மக்களை மற்றவர்களுக்கு எதிராக தூண்டி விடுவதன் மூலம் தங்கள் காரை நகர்த்திக் கொண்டு இருக்கிறது. ஆனால் அவர்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பஞ்சாப் முதல்வர் நேற்று பேசியதை நாடு முழுவதும் உள்ள மக்கள் கேட்டனர். அவரது டெல்லி குடும்பத்தினர், அவரது டெல்லி முதலாளி அருகில் இருந்து கைதட்டி கொண்டாடினர். சன்னி தனது பேச்சில் யாரை அவமதித்தார்.
உத்தரப்பிரதேசம், பிஹாரைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளை தான். அந்த மாநில மக்கள் வந்து உழைக்காத பகுதி என்று இந்த நாட்டில் இருக்க முடியாது.
நேற்று, சாந்த் ரவிதாஸின் பிறந்தநாளைக் கொண்டாடினோம். இந்த தலைவர்களை நான் கேட்க விரும்புகிறேன் சாந்த் ரவிதாஸ் எங்கே பிறந்தார்? அவர் பஞ்சாபில் பிறந்தவரா? உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிறந்தவர் சாந்த் ரவிதாஸ்.
இப்போது சாந்த் ரவிதாஸை பஞ்சாபுக்குள் நுழைய விடமாட்டோம் என்கிறீர்களா? இப்போது அவருடைய பெயரை அழித்துவிடுவீர்களா? நீங்கள் எந்த மொழியைப் பயன்படுத்துகிறீர்கள்.
குரு கோவிந்த் சிங் எங்கு பிறந்தார் என்று நான் கேட்க விரும்புகிறேன். பாட்னா சாகிப்பில் அவர் பிறந்தார். இப்போது குரு கோவிந்த் சிங்கை அவமரியாதை செய்வீர்களா? குரு கோவிந்த் சிங் பிறந்த மண்ணை மதிக்கவில்லை. இதுபோன்று பிரிவினை பேசும் ஒரு அரசியல் கட்சி பஞ்சாபை ஆட்சி செய்ய ஒரு கணம் கூட அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
சரண்ஜித் சன்னி மற்றும் பிரியங்காவின் பேச்சுக்கு ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.