புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் பதவிக்கு ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா உட்பட 32 பேர் போட்டியில் உள்ளனர். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனராக உள்ள ரன்தீப் குலாரியா அடுத்த மாதம் 23ம் தேதி ஓய்வு பெறுகிறார். காலியாக உள்ள அப்பதவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரலாக உள்ள பல்ராம் பார்கவா, எய்ம்ஸ் மருத்துவமனை எலும்பு மூட்டுவியல் துறை பேராசிரியர் ராஜேஷ் மல்கோத்ரா,விபத்து சிகிச்சை பிரிவு தலைவர் பத்மா ஸ்ரீவஸ்தவா, நரம்பியல் துறை தலைவர் நிகில் தாண்டன், இதய மற்றும் ரத்த குழாய் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் பிஷ்னோய், தடயவியல் துறை தலைவர் சுதிர் குப்தா உள்ளிட்ட 32 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில், புதிய இயக்குனரை தேர்ந்தெடுக்க ஒன்றிய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், பயோ டெக்னாலஜி துறை செயலாளர் ராஜேஷ் கோகலே, ஒன்றிய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன், டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தர் யோகேஷ் சிங் ஆகியோர் அடங்கிய தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விரைவில் கூடி புதிய இயக்குனர் பதவிக்கு தகுதி உள்ள சிலரின் பெயரை தேர்ந்தெடுத்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கும். பிரதமர் தலைமையிலான நியமனங்களுக்கான கேபினட் கமிட்டி இதுபற்றி பரிசீலனை செய்து அதில் இருந்து ஒருவரை தேர்வு செய்யும் என்றன.