புதுடெல்லி: வரி ஏய்ப்பு தொடர்பாக, டெல்லி, குருகிராம், பெங்களூருவில் உள்ள ஹூவாய் சீன செல்போன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் சீன செல்போன் நிறுவனமான ஹூவாய், வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், டெல்லி, குருகிராம் மற்றும் பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இந்திய வணிகங்கள் மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனைகள் தொடர்பான வரி ஏய்ப்பு குறித்தும், நிதி ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் நிறுவனத்தின் பதிவுகளை கைப்பற்றியும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவற்றில் குற்றம் நடந்ததற்கான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. கடந்தாண்டு சீன செல்போன் நிறுவனங்களான ஜியோமி, ஓப்போ அலுவலகங்களில் சோதனை நடத்தி, ₹6,500 கோடிக்கு மேல் கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.சீனாவுக்கு பதிலடிலடாக் எல்லையில் சீன தனது ராணுவத்தை குவித்து அட்டகாசம் செய்து வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுப்பது போல் இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்களில் வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் அடுத்தடுத்து அதிரடி சோதனைகள் நடத்தி, சொத்துக்கள் முடக்கம், ஆவணங்கள் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.