சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், தேமுதிக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதி நாளான இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பிரச்சாரம் நிறைவு: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்.19-ல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான வார்டுகளைக் கைப்பற்றும் நோக்கில், தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனவரி 26-ம் தேதியிலிருந்தே அரசியல் கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டினர். அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு தங்களது கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தனர். மக்களை ஈர்க்கும் வாக்குறுதிகள், ஆட்டம் பாட்டம் என விழாக்கோலம் பூண்டிருந்த உள்ளூர் ஜனநாயகத் திருவிழாவின் தேர்தல் பிரச்சார கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன. இந்தப் பிரச்சாரத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் பேசிய சில முக்கிய பிரச்சாரத் துணுக்குகளின் தொகுப்பு:
மு.க.ஸ்டாலின் (தலைவர், திமுக): “தங்களது ஆட்சியில் செய்த சாதனைகள் என்றுகூறி மக்களிடம் வாக்கு சேகரிக்க எந்தக் காரணமும் இல்லாததால்தான் அதிமுகவினர், அதனை மறைப்பதற்காக திமுக ஆட்சி பற்றியும், என்னை பற்றியும் அவதூறான குற்றச்சாட்டுக்களை ஆதரமற்ற வகையில் தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் கிடைத்த மரண அடிதான் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைக்கும்.”
ஓ.பன்னீர்செல்வம் (ஒருங்கிணைப்பாளர், அதிமுக): ” திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளும் பொய். அதாவது 505 பொய், இந்த பொய்யை மீண்டும் மீண்டும் கூறி மக்களை நம்பவைத்தனர். ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியது, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.”
அண்ணாமலை (மாநில தலைவர், பாஜக): “மத்திய அரசை வம்புக்கு இழுத்து, சண்டை போட்டு அதன்மூலமாக அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். 2 கோடியே 60 லட்சம் பேருக்கு மேல் நாளை வாக்களிக்க இருக்கின்றனர். மக்களை முதல்வர் இதுவரை சந்திக்கவில்லை. மக்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்காமல், காணொலி மூலம் வாக்கு சேகரித்து வருகிறார்.”
உதயநிதி ஸ்டாலின் (திமுக): “கரோனாவில் ஊரடங்கை மட்டும் அறிவித்துவிட்டு காணாமல் போனது அதிமுக அரசு. ஆனால் மக்களிடம் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி 3-வது அலையை கட்டுப்படுத்தியது திமுக அரசு. அதுமட்டுமல்ல தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.”
கே.எஸ்.அழகிரி (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி): “கூட்டணியில் இருந்து பிரிந்ததற்கான காரணத்தை பாஜகவோ, அதிமுகவோ இதுவரை கூறவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லையென்றால், நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக தனித்து நிற்குமா?”
பிரேமலதா (பொருளாளர், தேமுதிக): “தேர்தல் என்றாலே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை வளர்த்து விட்டுள்ளனர். நன்றாக இருந்த நகரங்களை, ஸ்மார்ட் சிட்டி என்றுக்கூறி, இருக்கின்ற சாலைகளைத் தோண்டி குண்டும் குழியுமாக்கியதை தவிர எங்கேயும் ஸ்மார்ட் சிட்டி வரவில்லை”.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்): “கொடநாட்டில் நடந்த கொலைக்கும், கொள்ளைக்கும் மூலகாரணம், முதன்மையான காரணம் எடப்பாடி பழனிசாமிதான். நீதிமன்றம் கண்டிப்பாக அவரை தண்டிக்கப்போகிறது. அப்படி தண்டிக்கப்படும்போது, முதலில் சந்தோஷப்பட போகிறவராக ஓ.பன்னீர்செல்வமம் இருப்பார்.”
துரை வைகோ (தலைமை கழகச் செயலாளர், மதிமுக): “வலதுசாரி அரசியல் செய்வது பாஜக. அதற்கு துணை போனது அதிமுக. மக்களை மதத்தால், சாதியால் பிளவுபடுத்த நினைக்கிற மதவாத சக்தியான பாஜக அதற்கு துணைபோகும் அதிமுகவுக்கு இந்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.”
இரா.முத்தரசன் (மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): “10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்தது என்று எல்லோரையும் போன்றே அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் கூறுகிறார். 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் சீரழிந்து போய்விட்டது. அதனால்தான் நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் நன்றாக இல்லை” என்று ஓ.பன்னீர்செல்வமும் கூறுகின்றார்.
”சீமான் ( தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்): “தமிழகத்தில் மாற்றத்துக்கான கட்சி இல்லை. திமுகவை விட்டால் அதிமுக, அதிமுகவை விட்டால் திமுகதான் எனப்பேசுவது ஏற்புடையது அல்ல. பல இடங்களில் பாஜகவை எதிர்த்து திமுக போட்டியிடவே இல்லை. பாஜகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சிதான் போட்டியிடுகிறது.”