2017-ம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தவர் பஞ்சாப்பின் அமரீந்தர் சிங். அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராகவும் அமரீந்தர் சிங் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அமரீந்தர் சிங் அறிவித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை அமரீந்தர் சிங் தொடங்கினார்.
இந்த நிலையில், பஞ்சாப் தேர்தலை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் ஃபதேகர் சாஹிப்பில் இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் ஏன் நீக்கப்பட்டார் என்பதை உங்களிடம் சொல்கிறேன்.
மின்சாரம் வழங்கும் சில நிறுவனங்களுடன் எனக்கு ஒப்பந்தம் உள்ளது. ஆனால், ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்க அமரீந்தர் சிங் ஒப்புக்கொள்ளவில்லை, அதனால்தான் அமரீந்தர் சிங் பஞ்சாப் முதல்வர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டார்” என்றார்.
வரும் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 20) பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியானது பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.