புதுடெல்லி:
பாஜக தலைமையிலான மத்திய அரசையும், மத்திய அரசின் கொள்கைகளையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சனம் செய்தார்.
குறிப்பாக வேளாண் சட்டங்கள் மீதான அரசின் கொள்கைகள், நாட்டில் மக்களின் கடனை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
“இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பாஜகவின் பிரித்தாளும் கொள்கையால் அரசியலமைப்பு பலவீனமடைந்துள்ளது. பொருளாதாரக் கொள்கைகளில் பாஜகவுக்கு துளியும் புரிதலில்லை. வெளியுறவுக் கொள்கையிலும் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. சீனா நமது எல்லையில் ஊடுருவி உள்ளது.
பாஜக 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் உள்ளது, ஆனால் இன்னும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவையே குற்றம் சாட்டுகிறது. பிரதமர் பதவிக்கென ஒரு குறிப்பிட்ட கவுரவம் உண்டு. நான் 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்தபோது, எனது பணிகளின் மூலம் பேசினேன். உலகத்தின் முன் தேசத்தின் கவுரவத்தை இழக்க நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இந்தியாவின் பெருமையை நான் ஒருபோதும் குறைக்கவில்லை.
அரசியல் லாபத்துக்காகவோ, உண்மையை மறைக்கவோ காங்கிரஸ் கட்சி ஒருபோதும் நாட்டைப் பிரிக்கவில்லை. ஆனால் பாஜகவோ, பிரிட்டிஷ் கொள்கையின் அடிப்படையில் போலி தேசியவாதியை நம்புகிறது’’ என மன்மோகன் சிங் பேசினார்.