புதுக்கோட்டைப் பெரியார் நகரைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத்(33). இவர் புதுக்கோட்டை நகராட்சி 23-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தான், கடந்த 13-ம் தேதி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதி முன்பு கார்த்திக் என்ற இளைஞர் சிகரெட்டில் கஞ்சாவை இழுத்துப் புகைத்துக் கொண்டிருந்திருக்கிறார். இதையடுத்து, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையிலான போலீஸார் இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனக்கு வழக்கமாகப் பெரியார் நகரைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர் கஞ்சா சப்ளை செய்கிறார் என்று கூறியுள்ளார். இளைஞர் கூறிய அப்துல் மஜீத் என்பவர் புதுக்கோட்டை நகராட்சி 23-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதையடுத்து அப்துல் மஜீத்தைப் பிடித்துப் போலீஸார் தீவிர விசாரித்த போது, அவரிடமிருந்த 5 கிராம் கொண்ட 40 கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
அப்துல் மஜீத் அவருடன் அவரின் நண்பர் முரளி என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த சர்மா(20), நரேந்திரகுமார்(27), கதிர்வேல்(34), மியாகனி(22) உட்பட 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 8 கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனங்கள், தராசுகள், 4 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அனைவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கஞ்சா வழக்கில் கைதாகி இருப்பது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.