பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை மாவட்டங்களுக்கு மஞ்சள், இஞ்சி மற்றும் ஆடு வளர்ப்புத் திட்டங்கள் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப் படவுள்ளன.
அரசின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக மனை சார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கையினை மேம்படுத்தும் நோக்குடன் கிழக்கு மாகாணம் உட்பட பொலன்னறுவை மாவட்டத்திலும் இத்திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதனடிப்படையில் இவ்வாண்டு இத்திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்காக சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டல் வழங்கும் விசேட நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்தின் ஏற்பாட்டில் இன்று (17) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி. எஸ். அமலநாதன்; தலைமையில் இடம்பெற்ற தெளிவூட்டல் நிகழ்வில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், ஏற்றுமதி விவசாய திணைக்களம், கால்நடை அபிவிருத்தி திணைக்களம், நீர்பாசனத்திணைக்களம், விவசாய விரிவாக்கல் பிரிவு ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
இத்திட்டத்தின் மூலம் வீட்டுத் தோட்டங்களுக்காக ஒருமாதம் பராமரித்து வளர்க்கப்பட்ட இஞ்சி மற்றும் மஞ்சள் கன்றுகள் இருபது பக்கற்றுகளும், தோட்டங்களுக்காக குறைந்தது ஒரு பேச் நிலத்திற்கு 3 கிலோகிராம் விதைகளும் 2 பேச் நிலத்திற்கு 6 கிலோ விதைகளும் வழங்கப்படவுள்ளன.
இத்திட்டத்தினை சிறப்பாக இம்மாவட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை வழிகாட்டல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி. எஸ். அமலநாதனினால் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டதிற்கென மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சுமார் 40 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.