புதுடெல்லி:
பாஜக தலைமையிலான மத்திய அரசையும், மத்திய அரசின் கொள்கைகளையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சனம் செய்தார்.
‘இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பாஜகவின் பிரித்தாளும் கொள்கையால் அரசியலமைப்பு பலவீனமடைந்துள்ளது. பொருளாதாரக் கொள்கைகளில் பாஜகவுக்கு துளியும் புரிதலில்லை. வெளியுறவுக் கொள்கையிலும் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. சீனா நமது எல்லையில் ஊடுருவி ஆக்கிரமித்துள்ளது’ என்றும் மன்மோகன் சிங் சரமாரியாக குற்றம்சாட்டினார்.
மன்மோகன் சிங்கின் இந்த குற்றச்சாட்டிற்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தில் ஜிடிபி 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தது. பணவீக்கம் அதிகரித்தது. முன்னாள் தேசிய பங்குச்சந்தை தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா, நாட்டின் மிகப்பெரிய பங்குச் சந்தையை நடத்துவதில் மதகுரு ஒருவரின் வழிகாட்டுதலைப் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது, இவ்வளவு காலம் பங்குச்சந்தை எப்படி நடத்தப்பட்டது என்பது கூட அவருக்குத் தெரியாது.
உங்கள் (மன்மோகன் சிங்) மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இதை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. உங்கள் கருத்துக்கள் வேதனை அளிக்கின்றன.
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பது பற்றி பரிசீலனை செய்வதன் காரணமாக அவர் திடீரென்று பொருளாதாரத்தைப் பற்றி பேசுகிறாரா? என்று ஆச்சரியமாக இருக்கிறது. மோடி அரசாங்கத்தின் போது ஏற்றுமதி, வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் பணவீக்கம் பற்றிய தரவுகளை மன்மோகன் சிங்கின் ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தை விட இப்போது சிறப்பாக உள்ளது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.