குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாத் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14 அன்று 5 முதல் 8 வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சு போட்டி நடைபெற்றது. இந்தப் பேச்சு போட்டியில் ‘மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே’, ‘வானத்தில் பறக்கும் பறவைகளை மட்டுமே நான் விரும்புகிறேன்’ மற்றும் ‘நான் ஒரு விஞ்ஞானியாக மாறுவேன். ஆனால் அமெரிக்கா செல்ல மாட்டேன்’ என்ற மூன்று தலைப்புகளின் கீழ் மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 25 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கேற்றன.
இந்தப் பேச்சு போட்டியில் இடம்பெற்ற ‘மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே’ என்ற தலைப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்தச் சர்ச்சைக்குரிய தலைப்பு தொடர்பாக காந்தி நகரில் உள்ள கலாசாரத் துறையின் உயர் அதிகாரிகளிடமிருந்து விசாரணை நடத்தும்படி உத்தரவு வந்தது. இதன் அடிப்படையில், இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்த வல்சால் மாவட்ட இளைஞர் மேம்பாட்டு அதிகாரி திருமதி.மிதாபென் கவ்லி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அவரின் பணி இடைநீக்க உத்தரவில், “பொறுப்பான அரசாங்க அதிகாரியாக இருந்த போதிலும் பாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் உரிய கவனம் செலுத்தவில்லை என்று தோன்றுகிறது. எனவே, பொது மற்றும் நிர்வாக நலன்களுக்காக, நீங்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.