இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் மிடில் ஆர்டர் வரிசையில் இடம் பிடித்திருந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயாஸ் அய்யருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இது சிலரை முனுமுனுக்க வைத்தது. இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஷ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கூறியதாவது:-
ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற ஒருவருக்கு, ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்காமல் வெளியில் இருப்பது கடினமான ஒன்றாகும். ஆனால், எங்களுக்கு மிடில் ஆர்டர் வரிசையில் பந்து வீசும் வகையில் ஒருவர் தேவைப்படுகிறார். இதனால் நாங்கள் அவரை ஆடும் லெவன் அணியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஏராளமான வீரர்களுக்கு இடையில் அணியில் இடம் பிடிக்க போட்டி இருப்பது சிறப்பானது. ஃபார்ம் இன்றி அணியில் இடம் பிடிக்காமல் இருப்பதைவிட, கடும் போட்டியில் அணியில் இடம் பிடிக்காமல் இருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.
நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். உலகக் கோப்பைக்கு தயாராக விரும்புகிறோம் என்பதை பற்றி அவரிடம் தெளிவாக தெரிவித்துவிட்டோம். அனைத்து வீரர்களும் அணிகள் விரும்புவதை புரிந்து கொள்ள வேண்டும். தொழில்முறை வீரர்கள், அணிதான் முதல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தகுதியான நபராக இருக்கும்போது, சில நேரங்களில் நாங்கள் சிலரை வெளியில் வைக்க வேண்டும் அவசியம் ஏற்படுகிறது.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்… கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்