சென்னை: 10, 12-ம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுவதாகவும், இத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண் பொதுத்தேர்வுக்கு கணக்கில்கொள்ளப்படாது என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ்2மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. பல்வேறு பாடங்களுக்கான கேள்வித்தாள் முன்கூட்டியே சமூக ஊடகங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பணியிடை நீக்கம், வினாத்தாள் வெளியான 2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை என பல்வேறு சர்ச்சைகளுடன் முதல் திருப்புதல் தேர்வு முடிவடைந்துள்ளது.
இதற்கிடையே, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களை அதற்குத் தயார்படுத்தவே 2 திருப்புதல் தேர்வுகளை, பொதுத்தேர்வு போன்றே நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் திருப்புதல் தேர்வு முடிந்த நிலையில், 2-வது திருப்புதல் தேர்வு விரைவில்நடத்தப்படும். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு நடைபெறும்.
திருப்புதல் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் பொதுத்தேர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. எனவே, மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட வேண்டாம், மாணவர்களை பொதுத்தேர்வு எழுத ஒரு அடிப்படை பயிற்சியாக மட்டுமே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது’’ என்றனர்.