ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் இருந்து 20 கி.மீ தொலைவில் லிட்டில் பே கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் நேற்று நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ஒருவரை பெரிய சுறா மீன் ஒன்று தாக்கியது. இதில் அந்த நபர் உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வளைத்தளங்களில் பரவி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, சிட்னி கடற்கரையில் நுழைய பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுறா மீன் தாக்குதல் நடத்திய இடத்தைச் சுற்றி அபாயப் பகுதி என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூசவுத் வேல்ஸ் முதன்மை தொழில்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-
இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ததில் நபரை தாக்கியது 9.8 அடி நீளமுள்ள வெள்ளை நிற சுறாவாக இருக்கலாம் என்று சுறா உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1963-ம் ஆண்டுக்கு பிறகு சிட்னியில் நடந்த முதல் அபாயகரமான சுறா தாக்குதல் இதுவாகும். கோடைக் காலத்தில் மக்கள் கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். சுறா மீன் இருப்பது குறித்து அதிகாரிகள் ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
பிரேசிலில் கனமழை- வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி