அஜித்தின் ரசிகர்கள் `வலிமை’ ரிலீஸில் பரபரப்பாக இருக்கிறார்கள். ஆனால் ஹெச்.வினோத்தின் டீமோ ‘ஏகே61’க்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டனர்.
ஹைதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இப்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. செட் வேலைகள் நிறைவடைந்த பின்பு, படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவாகின்றன. ஹீரோயினாக தபுவை கமிட் செய்துள்ளனர். ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்திற்குப் பிறகு 22 ஆண்டுகள் கழித்து தற்போது அஜித்துடன் நடிக்கிறார் தபு. ‘வலிமை’யில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை மாற்றிய அஜித், இதிலும் லுக் மாற்றியிருக்கிறார். இந்தக் கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகிவிட்டார் என்றும், அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இயக்குநரிடம் காட்டியிருக்கிறார் என்கின்றனர். வினோத்தும் அந்த லுக்கில் ஆச்சர்யமாகிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
இதர நடிகர்களின் தேர்வுகளும் இன்னொரு புறம் நடந்து வருகிறது. டெக்னீஷியன்கள் டீமில் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் இருக்கலாம் என்கிறார்கள் காரணம் இருவருமே அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ இரண்டிலும் இருந்துள்ளதால் அதே டீம் இணைகிறது. இசையமைப்பாளராக ஜிப்ரான் இருக்கலாம் என்கிறார்கள். ‘தீரன் அதிகாரம் ஒன்று’க்கு பிறகு வினோத்துடன் கைகோர்க்கிறார் அவர்.
இந்த ‘ஏகே61’ படத்தில் மோகன்லால், நாகார்ஜூனா, அதிதிராவ் ஆகியோர் நடிக்கின்றனர் என்ற தகவலை தயாரிப்பு தரப்பினர் மறுத்துவிட்டனர். ‘வலிமை’ ஐந்து மொழிகளில் வெளியாவதை போல இந்தப் படத்தையும் பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மார்ச்சில் தொடங்கும் படப்பிடிப்பு ஒரே மூச்சில் நடப்பதுடன், படத்தை தீபாவளிக்கு கொண்டு வரவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.