மாஸ்கோ:ரஷ்யா – உக்ரைன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ரஷ்யா அணு ஆயுதங்களை வைத்து, போர் பயிற்சிகளில் இன்று ஈடுபட உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்புகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் குரல் கொடுத்து வருகின்றன. ராணுவ வீரர்களையும், போர் விமானங்களையும் அனுப்பி வருகின்றன.இந்த பரபரப்பான சூழலில், தங்கள் நாட்டின் அணுசக்தி திறனை வெளிபடுத்தும் விதமாக, ரஷ்யா அணு ஆயுதங்களை வைத்து, போர் பயிற்சிகளில் இன்று ஈடுபட உள்ளது. இதில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் இடம்பெறவிருக்கின்றன.
போர் பயிற்சியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேற்பார்வையிட உள்ளதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.அச்சுறுத்தல் உள்ளது! ரஷ்யா – உக்ரைன் விவகாரம் குறித்து, நேற்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் அச்சுறுத்தல், மிக அதிகமாகவே உள்ளது. காரணம், உக்ரைன் எல்லையில், அதிக அளவிலான வீரர்களை ரஷ்யா குவித்து வருகிறது. அடுத்த சில நாட்களில், அது நடக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தீர்வு காண வேண்டும்!
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவின் நிரந்தர துாதர் திருமூர்த்தி கூறியதாவது:ரஷ்யா – உக்ரைன் இடையில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்கான தீர்வு கண்டறியப்பட வேண்டும். அதையே இந்தியா விரும்புகிறது. இந்த நேரத்தில், இருதரப்பும் அமைதியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பேச்சு நடத்த வேண்டியது அவசியமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement