சென்னை: ஆத்திகர்களை விட நாத்திகர்களிடமே அதிக மூடநம்பிக்கை உள்ளது என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மதம் மாற்றம் பிரச்சனை பூதாகாரமாக எழுந்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் பதிவில், அது தொடர்பாக சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதுபோல பெரியாரை மதிப்பதாக கூறியிருப்பதுடன், நாத்திகர்களே அதிக மூட நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
அதன்படி, “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.” என்று இயேசு சொன்னதாக கூறியதுடன், “சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என சொல்வது உங்கள் கடமை. மீதம் கேட்பவன் பொறுப்பு. “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்.” அவனவன் நம்பினால் அவனுக்கு விமோசனம். இது மனமாற்றத்தைச் சொல்கிறதா, மதமாற்றத்தைச் சொல்கிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ளதுடன், இது இறைவனின் கட்டளை என்பதால் இந்த சத்தியத்தை விசுவாசிக்கிற யாரும் அதைப் பிறருக்குப் பிரசங்கிக்கிற பொறுப்பை தாங்களாகவே ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றனர் என்று மத மாற்றம் செய்வதை நியாயப்படுத்தி உள்ளார்.
ஆனால், அடுத்த பதிவில், தேர்தல் நேரத்தில் எல்லாக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபடுகின்றன. அந்தப் பேச்சுகளைக் கேட்கிற பலதரப்பட்ட வாக்காளர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி எதிர்வினையாற்றுகின்றனர். பேசுபவர்களின் நம்பகத்தன்மை, பேசுபொருளில் உள்ள உண்மை ஆகியவற்றை வைத்துதானே ஒவ்வொருவரும் ஒரு தீர்மானத்துக்கு வருகின்றனர்?
“இறைநம்பிக்கை இல்லாதவர் ‘கடவுள் உண்டா இல்லையா? படைப்பா பரிணாமமா?’ என்கிற விவாதத்துக்குள் செல்லவேண்டாம் என்பது என் அறிவுரை. முதல் காரணம், அது முடிவற்ற விவாதம். நேரம்தான் வீண்.
இரண்டாவது, நம்பிக்கை உள்ளவர்கள் ‘கடவுள் சர்வ வல்லவர், எல்லாவற்றையும் படைக்க அவருக்குத் திராணியுண்டு’ என்று சொல்லிவிட்டால் அத்தோடு அவர்கள் வாதம் முடிவுறும். அதற்குள் எல்லாம் அடக்கம். ஏனெனில், அது நம்பிக்கை அடிப்படையிலானது.
ஆனால், அறிவியல் அப்படியல்ல. ஒவ்வொரு கூற்றையும் நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால்தானே அறிவியல். நிரூபிக்க வேண்டியது அறிவியல்தான், நம்பிக்கையல்ல. ஆனால் பாவம், நீங்கள் எங்கே போவீர்கள்! அதனால், இதைப்போன்ற வாதங்களை நீங்கள் அறவே தவிர்த்துவிடுவது நல்லது.
ஆனால், ஆத்திகர்களை விட நாத்திகர்கள் அதிகமான மூடநம்பிக்கைக் கொண்டவர்கள். ஏதோ ஒரு அறிவியல் மேதை எங்கோ சொன்னது சரியாகத்தான் இருக்கும் என்கிற அதீத நம்பிக்கையில்தானே நாத்திகராக வாழ்கிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி ‘கடவுள் இல்லவே இல்லை’.. ‘கடவுளை கற்பித்தவன் முட்டாள். கடவுளை பரப்பினவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி’ என்று சொன்ன பெரியாரை நான் பெரிதும் மதிக்கிறேன்.
இதைச் சொன்னதற்காக அல்ல.. என் தமிழ் சமூகத்துக்கு விடுதலை தேடித் தந்ததற்காக. ஒடுக்கப்பட்ட இனத்துக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்ததற்காக. அஞ்சி நின்றவர்களைத் தட்டியெழுப்பியதற்காக.என்றும் என் இனத்தின் தலைவன் அந்தக் கிழவன்.” எனப் பதிவிட்டுள்ளார்.